ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
அன்று மனைவியை கொன்று எரித்து ட்ராமா போட்ட கணவன் இன்று அதே நபரை கொன்று ட்ராமா போட்ட நண்பன்...10 ஆண்டு பூமாராங்..!
Nov 21, 2025 02:25 AM
365
நண்பனை கொலை செய்து நாடகம்.. மிரளவைக்கும் கிரைம் ஃப்ளாஷ்பேக்..!
கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே உள்ள BRG மாதேப்பள்ளியில் வசித்து வரும் 49 வயது சென்னகேசவன் என்பவர், தனது வீட்டின் முன்பு ஆண் சடலம் கிடப்பதாக 19 ஆம் தேதி புதன்கிழமை காலை அப்பகுதியில் உள்ளவர்களிடம் பதறியடித்தபடி ஓடிவந்து கூறியிருக்கிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த கந்திகுப்பம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்ல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கூறிய சென்னகேசவன், “தூங்கி எழுந்து வந்து பார்க்கிறேன். வீட்டு வாசலில் ஒரு பிணம் கிடக்குது சார்” என பதட்டத்தோடும் நடுக்கத்தோடும் கூறியுள்ளார், சென்னகேசவன்.
“மழையில நனைஞ்சதால உன் உடம்பு குளிர்ல நடுங்கிக்கிட்டிருக்குன்னு நினைக்கிறேன். கொஞ்சம் சூடான எல்லாம் சரியாகிடும்” என சொல்லிக்கொண்டே சென்னக்கேசவனின் கன்னத்தில் விசாரணை அதிகாரி ஓங்கி ஒரு அறைவிட்டு, “இப்போ உண்மையை சொல்லு. உன்கூடவே சுத்திக்கிட்டிந்தவன் எப்படி மண்ணுக்குள்ள போனான்?” என கேட்க, உண்மையை கக்க ஆரம்பித்தார், சென்னகேசவன். “ஆமாம் சார் இந்த பிணம் என்னோட நண்பன் தான் சார்” என்ற சென்னகேசவன் சொன்ன ஃப்ளாஷ்பேக்கில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கொலை செய்யப்பட்ட நண்பனின் ஃப்ளாஷ்பேக்கை கேட்டு, அதற்குப்பிறகுதான் சென்னகேசவன் இன்னும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
முதலில், சென்னகேசவன் சொன்ன ஃப்ளாஷ்பேக் இதுதான்... சென்னகேசவனுக்கு கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. மனைவியோ கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவனிடம் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி சென்றுவிட்டதால் சென்னகேசவன் மட்டும் அந்த வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், சென்னையில் உள்ள சென்னகேசவனின் நண்பரான கணேசன் அவ்வப்போது பர்கூர் வந்து, BRG மாதேப்பள்ளியில் உள்ள சென்னகேசவன் வீட்டில் மூன்று, நான்கு நாட்கள் தங்கி மது அருந்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கம்போல் கடந்த வாரம் பர்கூர் அடுத்த BRG மாதேப்பள்ளிக்கு வந்த கணேசன், சென்னகேசவனுடனே தங்கி மது அருந்தி வந்துள்ளார். 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இருவரும் காலையில் இருந்தே மது அருந்தி வந்துள்ளனர். மாலை இருவரும் 2 குவார்ட்டர்கள் மற்றும் பிரியாணியை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று, மது அருந்தி கொண்டே சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, பிரியாணி சாப்பிடும் போது கணேசன் இலையில் இருந்து பிரியாணி கீழே சிந்தியுள்ளது. இதைப் பார்த்த சென்னகேசவன், “ஒழுங்கா சாப்பிட மாட்டியா, கீழே சிந்தி வீட்டை குப்பையாக மாற்றினால், காலையில் யார் சுத்தம் செய்வது, நான் தான் செய்யனும்” என உரிமையோடு திட்டியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சென்னகேசவன், கணேசனை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். மது போதையில் இருந்ததால் கணேசனும் ஒரே அடியில் சரிந்து கீழே விழுந்துள்ளார். சரிந்து கிடந்த கணேசனிடம் சென்று “ஏய்... நல்லா ஆக்டிங் கொடுக்கிறடா. என்கிட்டயே நடிக்கிற பார்த்தியா? அட ச்ச எந்திரி” என காலால் எட்டி உதைத்துள்ளார். ஆனால், கணேசனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. பின்னர், கணேசன் இறந்து விட்டதை அறிந்து அதிர்ச்சியான சென்னகேசவன், யாரேனும் கேட்டால் என்ன சொல்வது என யோசித்து, கணேசனின் உடலை ஷோபாவில் படுக்க வைத்துள்ளார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் தூங்கியவுடன், அரை போதையில் வீட்டு வளாகத்திலேயே சிறிய குழியைத் தோண்டி நள்ளிரவு 12 மணியளவில் அதில் கணேசனின் உடலை புதைத்துள்ளார். அடுத்த நாள் திங்கள்கிழமை காலை எதுவும் தெரியாதது போல் அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் சிறிய அளவில் தோண்டி புதைக்கப்பட்ட உடல் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
மேலும் துர்நாற்றமும் வீச ஆரம்பித்தது. இதனையெடுத்து புதன்கிழமை அதிகாலை, தெருவில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த உடலை எடுத்து வந்து வீட்டு காம்பவுண்டிற்கு வெளியே போட்டு விட்டு, ஒன்றும் தெரியாதது போல காலை வெளியே வந்து “பிணம் கிடப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறினேன்” என போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார், சென்னகேசவன்.
“நீ அடிச்சு கொலை செஞ்ச, உன் நண்பன் கணேசன் யார் தெரியுமா?” என போலீஸார், சொல்ல ஆரம்பித்தபோதுதான், சென்னகேசவன் அதிர்ந்துபோயிருக்கிறார். கணேசனின் ஃப்ளாஷ்பேக் இதுதான்... கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பர்கூர் பகுதியில் தங்கி கேபிள் ஆபரேட்டர் தொழில் செய்து வந்தார். இவருக்கு கல்பனாஸ்ரீ என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கல்பனாவின் நடத்தையில் சந்தேகமடைந்த கணேசன் கடந்த 2014 ஆம் ஆண்டு நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மனைவி கல்பனா ஸ்ரீயை வெட்டி படுகொலை செய்தார். பிறகு, கல்பனா ஸ்ரீயின் பிணத்தை எடுத்து சென்று ஆந்திராவில் எரித்துள்ளார்.
பிறகு, கிருஷ்ணகிரி வந்த கணேசன் தனது மனைவியை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து நாடகம் ஆடியுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து படுகொலை செய்து, எரித்ததாக திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். கொலை வழக்கில் ஏ-2 அக்யூஸ்ட்டாக கைதான கணேசன், ஜாமினில் வந்த பிறகு, பர்கூரில் சில வாரங்கள் இருந்து விட்டு, பின்னர் சென்னை கிண்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். “இந்தநேரத்துலதான், உன்கூட நட்பு ஏற்பட்டிருக்கு” என கணேசனின் ஃப்ளாஷ்பேக் சென்னகேசவனுக்கு தெரியவந்துள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்பு மனைவியை வெட்டி படுகொலை செய்து எரித்து ஆந்திராவில் வீசிவிட்டு, மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுத்து நாடகம் ஆடிய கணேசன், தனது நண்பனாலேயே கொலை செய்யப்பட்டதும், தனது நண்பனும் அதேபோல் நாடகம் ஆடியது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பத்து வருடங்களாக மனைவியை கொலை செய்த குற்றம் போலீஸாரால் நிரூபிக்கப்படாமல், பெயிலில் வெளிவந்து கெத்தாக சுற்றிக்கொண்டிருந்த கணேசன், நண்பனின் ஒரேயொரு அறையால் சுறுண்டுவிழுந்து உயிரிழந்துள்ளார். நண்பனும் அதேபோல் நடகமாடியுள்ளார். “இதுதான், பூமாராங்” என அதிர்ச்சியோடு பேசிவருகிறார்கள், கிருஷ்ணகிரி மக்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu