BIG STORIES
SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
Mar 10, 2026 04:46 AM
35
SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் போலியான கவரிங் நகைகளை தங்க நகை என்று அடமானம் வைத்து கடந்த ஒன்றரை வருடங்களில் 2 கோடி ரூபாய் பணத்தை அபேஸ் செய்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற இயலாமல் வங்கி நிர்வாகம் போராடி வருகின்றது.
கடந்த ஒன்றரை வருடமாக போலியான கவரிங் நகைகளை உண்மை என நம்பி பணம் கொடுத்த வள்ளல் பாரத ஸ்டேட் வங்கி கிளை இது தான்..!
தேசிய மயமாக்கப்பட்ட எஸ்பிஐ வங்கியின் நாகர்கோவில் வடசேரி கிளையில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வருபவர் சுப்பிரமணியன் (46) . இவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்,அதில் தங்கள் வங்கியில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நகைகளை சோதனையிடுவோம் என்றும் அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி நடந்திருப்பது தெரியவந்ததாகவும், வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ரெகுவரன் (36) இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதாகவும் கூறி இருந்தார்.
தக்கலை கீழகல்குறிச்சியை சேர்ந்த ரெகுவரன் (36) என்பவரை அழைத்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 1 1/2 வருடமாக பாரத ஸ்டேட் வங்கிக்கு டிசன் டிசைனாக நகை என்ற பெயரில் கவரிங் அல்வா கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது. நகை மதிபீட்டாளராக பணியில் இருக்கும் போது மாதத்திற்கு ஒரு நகை வீதம் போலியான கவரிங் நகைகளை எடுத்து வந்த ரெகுவரன், அதனை வேறு வேறு நபர்களின் பெயர்களின் தரமான தங்கம் என்று சான்றழித்து அடமானம் வைத்து சுமார் 2 கோடி ரூபாய் வரை பணம் பெற்றது தெரியவந்தது.
3 மாதங்களுக்கு ஒரு முறை நகைகளின் தரத்தை பரிசோதிக்கும் போது கூடவே இருக்கும் ரெகுவரன், அடமானமாக வைத்த போலி நகைகளை தரமான நகைகள் என்று தனியாக எடுத்து வைத்து சிக்காமல் தப்பித்து வந்துள்ளார். இந்த முறை நகைகளை சோதனை செய்யும் போது ரெகுவரன் விடுப்பில் இருந்ததால் , அவருக்கு பதிலாக வந்த நகைமதிப்பீட்டாளர் நகைகளை சோதனை செய்தார். அதிலும் வழக்கத்தை விட சில நகைகளுக்கு அதிக அளவு பணம் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த நகைகளை சோதித்த போது அவை போலி நகைகள் என்பது அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
ரெகுவரனிடம் இருந்து, வங்கியில் இருந்து மோசடியாக பெற்ற பணத்தை மீட்க வங்கி அதிகாரிகள் ஏற்கனவே முயன்றுள்ளனர். ஆனால் ரெகுவரனிடம் 2 கோடி மதிப்பில் எந்த ஒரு வீடோ , பொருளோ , சொத்துக்களோ இல்லை என்பதால் அவர்களால் பணத்தை எப்படி திருப்ப பெறுவது ? என்பது தெரியாமல் போலீசில் புகார் அளித்தது தெரியவந்தது. போலீசாரிடம் தாங்கள் ஏமாந்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்றும் ரெகுவரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வங்கி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் போலியான தங்க நகைகளை அடமானமாக வைத்து கிடைத்த மொத்த பணத்தையும் பிட்காயினில் முதலீடு செய்திருப்பதாகவும் , அதனை இப்போதைய சூழலில் உடனடியாக எடுக்க இயலாது , சூழல் சரியான பின்னர் நகைக்குரிய பணத்தை மட்டும் எடுத்து தருவதாக கூலாக கூறியுள்ளார் ரெகுவரன். இதையடுத்து தற்காலிக நகை மதிப்பீட்டாளர் ரெகுவரனை மோசடி வழக்கில் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலி நகை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலாளர் உள்ளிட்ட வேறு நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ரெகுவரன் சுருட்டிய ரூ 2கோடி பணத்தை எப்படி மீட்பது ? என்று தெரியாமல் வங்கி உயர் அதிகாரிகள் விழிபிதுங்கிப் போயுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu