தமிழ்நாடு
கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
Mar 14, 2026 02:05 PM
14
கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ 27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே வாகன விபத்தில் கணவனை இழந்து , 2 பெண் குழந்தைகளுடன் தவித்த கைம்பெண்ணுக்கு , மூன்றே மாதத்தில் 27 லட்சம் ரூபாய் இழப்பீட்டை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வைத்து வழங்கியது...
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அருளானந்தம் (35). இவரது மனைவி ஜெனிட்டா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதிய வயதான பெற்றோரும் இவர்களுடன் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அருளானந்தம் தனது பைக்கில் வேலைக்கு சென்றார்.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் குரங்கனி பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த வேன் ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருளானந்தம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக அருளானந்தம் இறந்ததால் அவரது குடும்பத்தினர் கடுமையாக தவித்தனர்.
இதை தொடர்ந்து இழப்பீடு வழங்கக்கோரி அருளானந்தத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர் நெல்லை மோட்டார் வாகன விபத்து கோரல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கறிஞர் ரவீந்திரன் மூலமாக அவர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி நிர்வாகத்தை எதிர் தரப்பாக வழக்கில் சேர்க்கப்பட்டது. இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழக்கறிஞர் கணேசன் ஆஜரானார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவுக்கு எதிராக வாதாடாமல் தவிர்த்ததோடு, கைம்பெண்ணின் நிலையை கருத்தில் கொண்டு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க முன் வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி முதுநிலை மேலாளர் முருகையா, முதுநிலை உதவியாளர் வரதராஜபெருமாள், உதவி மேலாளர்கள் சலேட்டம்மாள் மற்றும் ஆண்டனி ரிஷபா, வேணி ஆகியோர் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து நெல்லை நீதிமன்ற வளாகத்தில் வைத்து தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இரு தரப்புக்குமான சமரச முடிவை அடுத்து நடந்த நிகழ்வில் மாவட்ட தலைமை நீதிபதி சாய் சரவணன் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.27 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. நீதிபதிகள் சுரேஷ்குமார் குமார், நெல்லை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விபத்தில் சிக்கிய வேன் மற்றும் பைக் ஆகிய இரு வாகனங்களுக்கும் முறையான இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்ததால் இந்த இழப்பீடு சாத்தியமானதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu