முகப்பு
சுங்கச்சாவடியில் அட்டூழியம்.. HDFC வசூல் பாய்ஸ் வாகனத்தை மறித்தது ஏன் ?
Nov 24, 2025 01:28 AM
80
ஏய்..வண்டியவிட்டு இறங்குடா...! HDFC வசூல் பாய்ஸ் அட்டகாசம்..!
குடும்பத்துடன் சரக்கு வாகனத்தில் சென்ற ஓட்டுநரை மறித்து வங்கி அதிகாரிகள் எனக் கூறி அடாவடி செய்து சாவி பறிக்கும் காட்சிகள்தான் இவை..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில்குமார் , இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். செந்தில்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு ஹெச்டிஎஃப்சி வங்கியில் தவணை முறையில் சரக்கு லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவர் வாங்கிய சரக்கு வாகனத்தின் கடன் தவணையை இடையில் ஐந்து மாதங்களாக கட்டவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில்குமார் தனது மனைவி மகனுடன் சனிக்கிழமை காலை ஆத்தூரில் இருந்து ஈச்சர் வாகனத்தில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சேலம் கொண்டலாம்பட்டி புறவழிச்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தை நிறுத்தி செந்தில்குமாரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். நீங்கள் யார் என்று செந்தில்குமார் கேட்டபோது, தாங்கள் ஹெச்டிஎஃப்சி வங்கியில் இருந்து வருகிறோம் என்றும் தவணைத் தொகை செலுத்தாததால் வாகனத்தை விட்டு இறங்கி செல்லும்படியும் மிரட்டி உள்ளனர்.
ஆனால் செந்தில்குமார் வாகனத்தை விட்டு கீழே இறங்காமல் தொடர்ந்து சங்ககிரி நோக்கி சென்றுள்ளார். அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல், வைகுந்தம் சுங்கச்சாவடியில் சுற்றி வளைத்து செந்தில்குமாரை மிரட்டி உள்ளனர். உடனே செந்தில்குமார் காவல்துறை 100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். சங்ககிரி உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் வைகுந்தம் சுங்கச்சாவடிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் அந்த கும்பல் செந்தில்குமாரை விட்டு செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். செய்தியாளர்கள் வருவதாக தகவல் கேள்விப்பட்டவுடன் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது.
செந்தில்குமாரும் தனது மனைவி குழந்தையுடன் சங்ககிரி காவல் நிலையத்திற்கு சரக்கு லாரியுடன் சென்று தங்களை மர்ம கும்பல் துரத்தி வருவதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லாரிக்கான தவணையை தாம் தொடர்ந்து கட்டி வந்ததாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சலின் காரணமாக ஐந்து தவணைகள் கட்ட தவறிவிட்டதாகவும் செந்தில்குமார் தெரிவித்தார். வங்கியில் இருந்து வந்ததாக கூறி துரத்தி வந்தவர்கள் உண்மையிலேயே வங்கியைச் சேர்ந்தவர்களா? என்பது சந்தேகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
வங்கியின் அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்றும் எனவே அந்த கும்பல் யார் என்று தெரியவில்லை என்றும் செந்தில்குமார் கூறினார். போலீஸாரிடம் புகார் அளித்துள்ளோம். போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பட்டப்பகலில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸிலிருந்து சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி வரை ஈச்சர் வாகனத்தை 20க்கும் மேற்பட்ட கும்பல் துரத்தி வந்து குழந்தை அழுத நிலையில் தம்பதியினரை மிரட்டிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu