BIG STORIES
ரகசிய கேமரா விவகாரம் ஒரு தலை காதலனை போலீசில் சிக்க வைத்த பெண்..! பஞ்சாப் காதலன் சிக்கியது எப்படி ?
Nov 08, 2025 04:23 AM
282
ரகசிய கேமரா விவகாரம் ஒரு தலை காதலனை போலீசில் சிக்க வைத்த பெண்..!
கிருஷ்ணகிரி அருகே விடியல் மகளிர் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஒடிசாவை சேர்ந்த பெண், தனது பஞ்சாப் காதலனை காப்பாற்றுவதற்காக தன்னை ஒரு தலையாக காதலித்த இளைஞரை போலீசில் சிக்கவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள விடியல் மகளிர் விடுதியில் உள்ள குளியலறை ஒன்றில் காமிரா வைத்த விவகாரம் தொடர்பாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். காதலனின் பேச்சை கேட்டு ரகசிய காமிரா வைத்ததாக ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த நீலு குமாரி குப்தா என்ற பெண் ஊழியரை உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் இருந்து 6 பேரும், பெங்களூருவில் இருந்து 4 பேரும் என 10 தொழில் நுட்ப வல்லுனர்கள் குழு வந்து சம்பந்தப்பட்ட விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று வேறு எங்கும் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தினர்.
விசாரணையில் தனது காதலனான பெங்களூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் சொன்னதால் தான் கேமிராவை வைத்ததாகவும், கடந்த அக்டோபர் 19ம் தேதி சந்தோஷ்குமாரும், தானும் பெங்களூரில் தனிமையில் சந்தித்த போது கேமிராவை அவர் கொடுத்து வைக்க சொன்னதாகவும் நீலு குமாரி குப்தா போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து நீலு குமாரி குப்தா கொடுத்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, சந்தோஷ்குமார் பெங்களூரே இல்லை என்பதும், சந்தோஷ்குமார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அதே போல் சந்தோஷ்குமார் மொபைல் எண்ணின் டவர் சிக்னல் , நீலு குமாரி குப்தா கூறிய அக்டோபர் 19ம் தேதி ஒடிசா மாநிலத்திலேயே தான் இருந்ததும் தெரிய வந்தது.
நீலு குமாரி குப்தா கூறியது பொய் என உணர்ந்த போலீசார், நீலு குமாரி குப்தாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு நீலு குமாரி குப்தா அடிக்கடி நீண்ட நேரம் பேசி வந்ததும், அதே போல் சம்பவம் நடந்த கடந்த 2ம் தேதி இரவு 11.45 மணிக்கு கடைசியாக பேசிய பிறகு அந்த எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
போலீஸ் விசாரணையில் அசல் காதலன் அம்பலமானார். நீலுகுமாரி குப்தாவும், பஞ்சாப் மாநிலம் லூதியானா குலாப் நகர் பகுதியை சேர்ந்த ரவி பிரதாப் சிங் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் நீலுகுமாரி குப்தாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள டாடா மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த நீலூகுமாரி குப்தா, விடியல் ரெசிடென்சியில் உள்ள 4வது பிளாக் 8வது மாடியில் அறை எண் 808ல் 4 பேருடன் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். தான் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை தனது காதலனான ரவி பிரதாப் சிங்கிற்கு, அனுப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நீலுகுமாரி குப்தாவிடம், ரவி பிரதாப் சிங் செல்போனில் பேசும் போதெல்லாம் எனக்கு சொந்தமாக கார் வாங்கி அதில் உன்னை உட்கார வைத்து ஊர் சுற்ற வேண்டும், உன்னை ராணி மாதிரி வாழ வைத்து பார்க்க வேண்டும் ஆனால் பணம் தான் இல்லை, என தொடர்ந்து நீலுகுமாரி குப்தா வருத்தப்படும் படியாக பேசி வந்துள்ளார்.
இதனால் மனம் இறங்கிய நீலு குமாரி குப்தா, பக்கா பிளான் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். அந்த பிளான் குறித்து பேச ரவி பிரதாப் சிங்கை பெங்களூர் வரும்படி அழைத்துள்ளார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி பெங்களூரில் ரவி பிரதாப் சிங்கும், நீலுகுமாரி குப்தாவும் தனிமையில் சந்தித்து சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
அப்போது தான் தங்கியுள்ள விடுதி கழிவறைகளில் ரகசியமாக கேமரா வைப்போம், நான் அங்கேயே இருப்பதால் அதில் பதிவாகும் வீடியோ காட்சிகளில் யார் இருக்கிறார்களோ அவர்களின் செல்போன் எண்ணை நானே உனக்கு அனுப்பி வைக்கிறேன். அந்த வீடியோக்களை அவர்களின் செல்போன் எண்ணிற்கே அனுப்பி அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நீலு குமாரி குப்தாவே தனது பணத்தில் பெங்களூருவில் ரகசிய கேமராவை விலைக்கு வாங்கி வந்து விடுதி அறை கழிவறையில் பிக்ஸ் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கடந்த 2ம் தேதி இந்த கேமரா விவகாரம் வெளியில் தெரிந்ததால் அன்று இரவு 11.45 மணியளவில் தனது காதலன் ரவி பிரதாப் சிங்கிற்கு போன் செய்து, “ நாம வசமாக மாட்டிக்கிட்டோம் இப்போ என்ன செய்வது” ? என கேட்டுள்ளார். அதற்கு ரவி பிரதாப் சிங், நம் இருவரில் யாரவது ஒருவராவது வெளியே இருக்க வேண்டும் என கூறியதால், ஒருதலையாக காதலித்து வந்த சந்தோஷை போலீசாரிடம் மாட்டிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ரவி பிரதாப் சிங் தனது மொபைல் எண்ணெ மாற்றிவிட்டதால், நீலுகுமாரியிடம் வேறு நம்பரில் இருந்து பேசிய, ரவி பிரதாப் சிங்கின் மற்றொரு ரகசிய எண்ணை போலீசார் கண்டறிந்தனர். அந்த மொபைல் எண்ணை வைத்து டெல்லி நிஜாமுதின் ரயில்நிலையம் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் பதுங்கி இருந்த, ரவி பிரதாப் சிங்கை கிருஷ்ணகிரி தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் ரவி பிரதாப் சிங்கை, விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து, அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu