BIG STORIES
அன்னக்கிளியே சொந்தமில்லை”.. இளையராஜாவுக்கு தடை விதிப்பு.. அந்த 134 படங்கள் எவை தெரியுமா ?.. நீதிமன்றத்தில் சாதித்தது சரிகம
Feb 17, 2026 04:48 PM
23
அன்னக்கிளியே சொந்தமில்லை”.. இளையராஜாவுக்கு தடை விதிப்பு.. அந்த 134 படங்கள் எவை தெரியுமா ?
இளையராஜா தொடக்கத்தில் இசையமைத்த 134 படங்களின் பாடல்களை சரீகமா நிறுவனத்தின் அனுமதியின்றி அவர் பயன் படுத்த கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இன்றும் 80 ஸ் கிட்ஸ்களை தாலாட்டும் இந்த பாடல்களை பயன்படுத்த இளையராஜாவுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
தன்னுடைய பாடல்களை பாடவே தன்னுடைய அனுமதி வேண்டும் என்று காப்பிரைட்ஸின் உச்சம் தொட்டவர் இளையராஜா..! வித விதமாக மெட்டமைத்து... மெலடியாக கட்டமைத்த அவரது பாடல்களை அவரே பயன்படுத்த இயலாத நிலை காப்பிரைட்ஸால் இசை ஞானி இளையராஜாவுக்கு வந்திருக்கின்றது...!
1976 முதல் 2001 ஆம் ஆண்டுவரை இளையராஜா இசையமைத்த படங்களில், 134 படங்களின் தயாரிப்பாளர்கள் பாடல்களை சரீகம நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. இந்த நிலையில், அந்தபாடல்களின் உரிமை தன்னை சார்ந்தது என்றும் தனது இசையில் உருவான பாடல்களை சரீகம நிறுவனம் பயன்படுத்தக்கூடாது என்றும் இளையராஜா காப்பிரைட்ஸ் நோட்டீஸ் அனுப்பினார்.
பதிலுக்கு தங்களிடம் முறையான உரிமம் உள்ள 134 படங்களின் பாடல்களுக்கு காப்புரிமை தங்களிடம் இருப்பதாகவும், இளையராஜா தன்னுடைய பாடல் என்று அமேசான் மியூசிக், ஐ-டியூன்ஸ், ஜியோசாவ்ன்,போன்ற டிஜிட்டல் தளங்களுக்கு விற்றதாகவும் , இது சட்ட விரோதம் என்றும் காப்புரிமை சட்டத்தின் படி அந்த படத்தின் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்றும் சரிகம தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது இளையராஜா இசையமைத்த அன்னக்கிளி, 16 வயதினிலே, ரோசாப்பூ ரவிக்கைகாரி, ரெட்டைவால் குருவி, முள்ளும் மலரும் , தூறல் நின்னு போச்சி உள்ளிட்ட 134 படங்களின் பாடலுக்கான உரிமையை பெருந்தொகை கொடுத்து படத்தின் தயாரிப்பாளர்களிடம் பெற்றுள்ளதாக அது தொடர்பான ஆவணங்களை சரிகம தாக்கல் செய்தது.
விசாரணையின் இறுதியில் சரீகம கைவசம் உள்ள 134 படங்களின் பாடல்களையும் இளையராஜா பயன்படுத்த இடைக்காலதடை விதித்த நீதிமன்றம், சரிகம அனுமதியின்றி இந்த படங்களின் பாடல்களை இளையராஜா விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த தடையால் அவர் இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி படத்தின் பாடல்களையே இளையராஜா பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது
தடைவித்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் இளையராஜாவின் இசை மகுடத்தில் ஜொலிக்கின்ற வைரகற்கள் போன்றவை என்பதால் இளைய்ராஜா தரப்பு அதிர்ச்சி அடைந்தது.
மூடு பணி படத்தில் இடம் பெற்ற என் இனிய பொன் நிலாவே.. பாடலையும் இளையராஜா இனி பயன் படுத்த முடியாது.
மயிலின் ராகமாக 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற எந்த ஒரு பாடலுக்கும் இனி இளையராஜா சொந்தம் கொண்டாட முடியாது
படங்கள் தான் 134 , பாடல்கள் எண்ணிக்கை 900 ஐ தாண்டும் என்றும் அத்தனை பாடல்களும் இசைப்பிரியர்களை கவர்ந்த முத்துபோன்ற பாடல்கள் என்கின்றனர் இசைப்பிரியர்கள்
மாலை பொழுதில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பால் இனி , பொன்மாலை பொழுது பாடலை கூட இளையராஜா பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
கண்ணன் ஒரு கை குழந்தை என தமிழ் ரசிகர்களை தாலாட்டிய பாடலும் சரிகம கையில் தான் இருக்கின்றது.
டெல்லி நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்து பூங்கதவே தாழ் திறவாய்... என்று நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் காப்பிரைட்ஸ் ராஜா..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu