BIG STORIES
"10 நிமிடங்கள் கொடுங்கள்".. உச்ச நீதிமன்றத்தில் தனி ஆளாக வாதாடி வென்ற +2 மாணவன்..! வியந்து பாராட்டிய நீதிபதி..!
Feb 15, 2026 12:38 PM
14
"10 நிமிடங்கள் கொடுங்கள்".. உச்ச நீதிமன்றத்தில் தனி ஆளாக வாதாடி வென்ற +2 மாணவன்..!
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்விற்கு, நீதிபதி வந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்து "எனக்கு ஒரு 10 நிமிடங்கள் கொடுங்கள்" என ஒரு குரல் கேட்டது. அந்த குரல் மூத்த வழக்கறிஞரோடது இல்லை, 12 ஆம் வகுப்பு முடித்த 19 வயது இளைஞனின் குரல். இதனை தலைமை நீதிபதி ஆச்சரியத்தோடு பார்த்தார். அதன் பின் நடந்த சம்பவம் தான் அந்த இளைஞனை பார்த்து நீதிபதி மட்டுமில்லாமல், அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்தது.
மத்திய பிரதேச மாநிலம் ஜெபல்பூரை சேர்ந்த 19 வயது இளைஞர் அதர்வா சதுர்வேதி. இவர் நீட் தேர்வில் இரண்டு முறை தேர்ச்சி பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் 530 மதிப்பெண்களை பெற்றுள்ளார். மருத்துவ படிப்பு மீது ஆர்வம் கொண்ட அதர்வாவிற்கு, தனியார் மருத்துவமனை கல்லூரியில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவான EWS ஒதுக்கீட்டின் கீழ் MBBS இடத்தைப் பெற முடியவில்லை. தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை நீட்டிக்கும் கொள்கையை அரசு அமல்படுத்தாதது அதற்கு காரணமாக அமைந்தது.
இதனால் அதர்வா தாமாகவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கறிஞர் துணை இல்லாமல் சொந்தமாக அதர்வா நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். மாணவர் அதர்வாவின் சாமர்த்திய பேச்சை கவனித்த நீதிபதி,
அதர்வாவிடம் "நீ மருத்துவராகாமல் வழக்கறிஞர் ஆக வேண்டும், தவறான துறையை தேர்ந்தெடுத்து விட்டாய் போல" என சிரித்தபடி கூறிய நீதிபதி , மாணவர் அதர்வாவை வியந்து பாராட்டினார். ஆனால் பாராட்டு கிடைத்தாலும் அதர்வாவிற்கு சாதகமான தீர்ப்பு உயர்நீதி மன்றத்தில் கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத அதர்வா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தனி ஆளாக அதர்வா வாதாடினார். வியந்து போன உச்சநீதிமன்ற நீதிபதி, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் தனக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக எம்பிபிஎஸ் சேர்க்கை வழங்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மத்தியப் பிரதேச அரசுக்கும் உத்தரவிட்டார்.
அதுமட்டுமில்லாமல்,நீதிபதி , மாணவர் அதர்வாவை வியந்து பாராட்டினார்.
மேலும் அதர்வாவின் தந்தை மனோஜ் சதுர்வேதி வழக்கறிஞர் என்பது தெரியவந்தது.
இது குறித்து பேசிய மனோஜ் சதுர்வேதி, "என் மகன் சட்டம் படிக்கவே இல்லை, ஆனால் அது குறித்தான தேடல் அவனிடம் இருந்தது. எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டான். உண்மையில், மனுக்களை ஸ்கேன் செய்து பதிவேற்றுவது எப்படி என்று அவன் தான் எனக்குக் கற்றுக் கொடுத்தான்" என்று பெருமையோடு தெரிவித்தார்.
பல இளைஞர்கள் ஜிம்மிற்கு செல்வது சோசியல் மீடியாவில் மூழ்கி கிடப்பது என இருப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக, தனது மகன் அந்த நேரங்களில் குறுக்கு விசாரணைகள் பற்றி ஆன்லைனில் கவனித்து வந்தான். உச்ச நீதிமன்ற வலைத்தளத்திற்குச் சென்று, சிறப்பு விடுப்பு மனு வடிவத்தை அவனே பதிவிறக்கம் செய்தான். முந்தைய தீர்ப்புகளைப் படித்தான். பதிவேட்டில் உள்ள அனைத்தையும் சரிசெய்த பிறகு ஜனவரி 6 அன்று அதை ஆன்லைனில் தாக்கல் செய்தான்.
அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் கூட சில சமயங்களில் உச்ச நீதிமன்றத்தில் SLP தாக்கல் செய்வதற்கு தயங்குவார்கள். ஆனால் என் மகன் அதனை துணிந்து செய்தான். டெல்லியில் பயணம் மற்றும் தங்குமிட செலவுகளை மிச்சப்படுத்த, அதர்வா ஜபல்பூரிலேயே மனு தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்தார். தனது மகனுக்கு பொறியியல் கல்லூரியிலும் சீட் கிடைத்தது. ஆனாலும் மருத்துவம் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அது எளிமையானது என்பதால் அல்ல, அது கடினமானது என்பதால் தான் என அவர் குறிப்பிட்டார்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவன் தனி ஒரு ஆளாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வென்ற சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu