தமிழ்நாடு
செகண்ட் ஹேண்ட் காரை பளபளப்பாக்கி புதிதாக விற்று சுசி ஹூண்டாய் மோசடி..! ரூ 12.74 லட்சம் அபராதம் விதிப்பு..
Feb 25, 2026 02:11 PM
33
நெல்லையில் முதலில் விற்கப்பட்ட பழுதான காரை பளபளப்பாக்கி புதிய கார் என்று 2 வதாக விற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சுசி ஹூண்டாய் கார் விற்பனை நிறுவனத்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களை கவர ஹூண்டாய் நிறுவன டீலரான சுசி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிக்கின்ற ஆசை தூண்டில் தான் இந்த விலை குறைப்பு ஆஃபர்கள்..
திருநெல்வேலி சந்திப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் வெடிகுண்டு தடுப்பு புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர் . இவரது மனைவி பிரேமா பாக்கியத்தாய் புதிய கார் வாங்க முடிவு செய்தார். கடந்த 2024 ஜூன் மாதம் 19 ஆம் தேதி அன்று 9 லட்சத்து 08 ஆயிரத்து 089 ரூபாய் செலுத்தி புதிய ஹூண்டாய் காரை சுசி ஆட்டோ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வாங்கினார். வாகனம் வாங்கிய சில நாட்களிலேயே “Starting Problem” உள்ளிட்ட பல கோளாறுகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இதையடுத்து அந்த காரை பழுது நீக்கம் செய்ய சுசி மோட்டார்ஸ் சர்வீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆய்வின் போது, காரின் பேனட்டில் எலி புகுந்து சென்சார் பகுதியிலுள்ள வயர்களை கடித்ததால் பழுதானதாக கூறப்பட்டது. பழுது நீக்க மொத்தமாக 75,000 ரூபாய் செலவாகும் என்றும், அந்த தொகையை காப்பீட்டிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்தது. இதற்காக காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்த போது அந்த வாகனத்தின் காப்பீடு வேறு ஒரு நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
விசாரித்த போது அந்த ஹூண்டாய் காரை ஏற்கனவே “சாந்தி” என்ற நபருக்கு விற்பனை செய்யப்பட்டதை மறைத்து, காரை பளபளப்பாக்கி, பிரேமா பாக்கியத்தாயிடம் 2 வதாக விற்பனை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா பாக்கியத்தாய், வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பழைய காரை விற்றதற்கு பதிலாக புதிய வாகனம் வழங்க வேண்டும் அல்லது முழுத் தொகையையும் வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என வழக்கறிஞர் பிரம்மா கோரிக்கை வைத்தார். நிர்வாக காரணங்களால் வழக்கு திருநெல்வேலி கூடுதல் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினர்.
சுசி ஹூண்டாய் விற்பனை நிறுவனம் செய்தது முறையற்ற வாணிபமும் , சேவை குறைபாடுமாகும் என தீர்ப்பளித்த அவர்கள் , வாகனத்தின் முழு விற்பனைத் தொகை 9,08,089/- ரூபாய், காப்பீட்டு தொகை 34,075/- ரூபாய் , பதிவு மற்றும் தொடர்புடைய செலவுகள் 1,12,214/- ரூபாய் தொகையை 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 12,14,267/- ரூபாய் திருப்பி வழங்க உத்தரவிட்டனர்.
மேலும், மன உளைச்சலுக்காக 50,000/- ரூபாய் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவிற்காக 10,000/- ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது. இதனால் மொத்தம் 12,74,267/- ரூபாயை, பாதிக்கப்பட்ட பிரேமா பாக்கியத்தாய்க்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தொகையை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் கூடுதல் வட்டி விதிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய கார்கள் வாங்கும் போது ஆவணங்களை உரிய முறையில் ஆய்வு செய்து வாங்க வேண்டியது அவசியம், அதே நேரத்தில் கையில் வாங்கும் பணத்தின் மதிப்புக்கு நல்ல தரமான வாகனத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியது ஒவ்வொரு கார் விற்பனை நிறுவனத்தின் கடமை..! என வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu