குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
முதுபெரும் கம்யூ. தலைவர் நல்லகண்ணு காலமானார்
Feb 25, 2026 08:44 AM
200
முதுபெரும் கம்யூ. தலைவர் நல்லகண்ணு காலமானார்
கம்யூனிஸ்ட்டு இயக்க முதுபெரும் தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் காலமானார் . அவருக்கு வயது 101. நெல்லை மண்ணில் பிறந்து சமூகத்தில் அடித்தட்டு மக்களின் குரலாக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியதால் 27 வயதிலேயே ஆயுள் தண்டனை பெற்ற மக்கள் போராளியின் , சுய நலமில்லா மகத்தான அரசியல் பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
மறைந்த தலைவர்களான காமராஜர், கக்கனுக்கு பிறகு தற்கால அரசியலில் எளிமையின் அடையாளமாக சொல்லப்பட்ட ஒரே தலைவர் தோழர் நல்லக்கண்ணு...!
1925 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முந்தைய திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர் நல்லக்கண்ணு, சிறுவயதில் இருந்தே சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு காட்டிய நல்லகண்ணு 1942 ஆம் ஆண்டு நெல்லை இந்துக் கல்லூரியில் படித்த போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று போராடியதால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து 18 வயதில் கம்யூனிஸ்ட்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 2 ஆம் உலகபோரால் ஏற்பட்ட உணவு பஞ்சத்தால் மக்கள் தவித்துக் கொண்டிருக்க, பெரும் முதலாளி ஒருவர் பத்தினிக்கோட்டம் என்ற இடத்தில் 2000 நெல் மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக ஜனசக்தி நாளிதழில் துணிச்சலுடன் எழுதினார். இதனை தொடர்ந்து அந்த நெல் மூட்டைகள் மாவட்ட நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டது. ஏழை எளிய மக்களின் பசியாற உதவினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியேறி தனது பொது உடமை அரசியல் பயணத்தை தொடங்கினார்.
சுதந்திரத்துக்கு முன்பு மாணவர்களை திரட்டி வெள்ளையர்களையும், சுதந்திரத்திற்கு பின்னர் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையையும் எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர் மக்கள் போராளி தோழர் நல்லகண்ணு. கம்யூனிஸ்ட்டு இயக்கத்துக்கு தடைவிதிக்கப்பட்ட போது, ஆயுதபுரட்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது முகத்தில் மிடுக்காக காணப்பட்ட மீசையை தீயினால் பொசுக்கியும், பிய்த்தும் சித்ரவதை செய்து சிறையில் தள்ளப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் 7 ஆண்டுகளை சிறையில் கழித்தார் நல்லக்கண்ணு.
ஆரம்பம் முதலே சாதிய அடக்குமுறைக்கு எதிராக முனைப்புடன் செயலாற்றியவர் நல்லக்கண்ணு . தன்னை சாதியற்றவனாக அறிவித்துக் கொண்டு , 1958 ஆம் ஆண்டு சாதிய எதிர்ப்பு போராளி அன்னச்சாமி என்பவரின் மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொண்டார். சாதிக்கு எதிராக தன்னுடைய நிலைபாட்டில் கடைசி வரை உறுதியுடன் இருந்தார். 1999 ஆம் ஆண்டு சாதி கலவரத்தில் தனது மாமனார் அன்னச்சாமி கொலை செய்யப்பட்ட போது கூட அந்த கொலையை வைத்து சாதிய அரசியல் செய்ய துடித்தவர்களுக்கு எதிராக இருந்தார் நல்லக்கண்ணு. அதற்காக அரசு வழங்கிய நிதியை கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக பிரித்து கொடுத்த பெருந்தகையாளர் நல்லகண்ணு..!
பாரதியார் கவிதைகளின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்ட நல்லக்கண்ணு தனது முதல் மகளுக்கு காசி பாரதி என்றும் பேத்திக்கு பாரதி கண்ணம்மா என்றும் பெயர் சூட்டினார். தனது மகளின் காது குத்தும் விழாவுக்கு தங்கத்தில் காதணி வாங்க கையில் பணமின்றி கவரிங்கில் காதணி வாங்கி அணிவித்தவர். அதே நேரத்தில் கட்சியினர் நிதி திரட்டி தனக்கு தந்த 1 கோடி ரூபாயை கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர் நல்லக்கண்ணு, தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி நல்லக்கண்ணுவை சிறப்பித்த போது அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த பணத்தையும் கட்சிக்கும், விவசாய சங்கத்துக்கும் பகிர்ந்து கொடுத்த தகையாளர் நல்லக்கண்ணு..!
சுதந்திர போராட்ட வீரராகவும், 25 ஆண்டுகள் விவசாய சங்க தலைவராகவும், 13 ஆண்டுகள் கம்யூனிஸ்ட்டு இயக்கத்தின் மாநில செயலாளராகவும் எளிமையின் அடையாளமாகவும் திகழ்ந்த இவ்வளவு நல்ல மனிதரை தான் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் 3 முறை தோற்கடித்துள்ளனர். 1967 மற்றும் 1977 சட்ட மன்றத் தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர்களும், 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோவை வாக்காளர்களும், நல்லக்கண்ணுவை தேர்ந்தெடுக்காமல் தவற விட்டவர்கள்..!
எழை எளியோருக்காண போராட்டம், கம்யூனிஸ்ட்டு இயக்க பொதுக்கூட்டம், புத்தக வெளியீடு, தோழர்களின் திருமணம், துக்க நிகழ்வு என்று அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தமிழகம் முழுவதும் சுற்றி வந்த நல்லகண்ணுவுக்கு 2016 ஆம் ஆண்டு அவரது மனைவி ரஞ்சிதம் உயிரிழப்பு பெரும் சோகத்தை கொடுத்தது. இருந்தாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றியவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்ததால் காயம் அடைந்து முச்சுத்திணறல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினார். 101 வயதை கடந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி மீண்டும் மூச்சுதிணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நல்லக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. 25 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நல்லகண்ணுவின் உயிர் புதன்கிழமை மதியம் 1:55 மணிக்கு பிரிந்தது.
தோழர் நல்லக்கண்ணுவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் நல்லக்கண்ணுவின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்காக அவரது ஆசைபடியே தானமாக கொடுக்கப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu