BIG STORIES
அரசு ஊழியரை கார் ஏற்றி கொன்ற அரசியல்வாதி மகன்.! வீடியோவை மறைக்க டீலிங்?
Feb 25, 2026 08:26 AM
34
அரசு ஊழியரை கார் ஏற்றி கொன்ற அரசியல்வாதி மகன்.! வீடியோவை மறைக்க டீலிங்?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள அன்னை அரவிந்தர் நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி (54) இவர் ஓசூரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவி தொழிலாளர் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கிருபாகரன் (35) பாஸ்கர் (33) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கிருபாகரன் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் வெளியே விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது கிருபாகரனின் வீட்டின் வழியாக டொயொடோ பார்ச்சுனர் காரில் மூன்று இளைஞர்கள் சென்றபோது, சாலை ஓரமாக நின்ற பைக்கை எடுக்குமாறு கூற, அவர்கள் தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளனர்.
ஹாரன் சத்தம் கேட்ட கிருபாகரன், வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, காரில் இருந்த இளைஞர்கள் ஏற்கனவே எதிர் வீட்டுக்காரர்களை ஆபாசமாக திட்டி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது கிருபாகரன் தனது இரு சக்கர வாகனத்தை நகர்த்தியபோது, காருக்குள் மது போதையில் இருந்த கும்பல் இரு சக்கர வாகனத்தை இடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிருபாகரன் காரில் இருந்த இளைஞர்களோடு வாக்குவாதம் செய்துள்ளார்.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்த கிருபாகரனின் தந்தை சிவமூர்த்தி, மனைவி அம்சவேணி ஆகியோர் வெளியே வந்து பார்த்தபோது கிருபாகரனை தாக்குவதற்காக அந்த கும்பல் காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து கட்டையை எடுத்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிவமூர்த்தி மற்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள் சிலர் அந்த போதை கும்பலிடம் "ஏம்பா குடிச்சிட்டு வந்து தகராறு பண்றீங்க" எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றி போதை கும்பலுக்கும், அந்த பகுதி குடியிருப்பு வாசிகளுக்கும் கைகலப்பாக மாறியது.
பின்னர் அந்த போதை கும்பலில் இருந்தவர்கள் "எங்க மேலேயே கை வக்கிறீங்களா? நாங்க யார்ன்னு நினைச்சீங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு, இந்த இடமே கலவரமா மாறப்போகுது" என கூறி தனக்கு தெரிந்தவருக்கு போன் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு காரில் சிலர் வந்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்த குடியிருப்பு வாசிகளிடம் பேசிக்கொண்டிருந்த போதே, காரில் இருந்த கும்பல் காரை வளைத்து கொண்டு வந்து அங்கு நின்ற சிவமூர்த்தி, அவரது மகன் கிருபாகரன், மருமகள் அம்சவேணி, 6 வயது பேத்தி நிலானி ஆகியோர் மீது ஈவு இரக்கமின்றி மோதியுள்ளனர். அதில் 4 பேரும் படுகாயமடைந்தனர்.
கால் முறிந்து சாலையிலேயே எழ முடியாமல் கிடந்த சிவமூர்த்தியை ஆத்திரம் தீராத போதை கும்பல் காரை ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாடி ஏற்ற முயன்றனர். ஆனால் கார் மணலில் சிக்கி நகர முடியாமல் இருந்தாதால் பின்னோக்கி காரை இயக்கமுடியவில்லை.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் உடனே வேறொரு கார் மூலம் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சிவமூர்த்தியின் நெஞ்சு எலும்பு உடைந்து கல்லீரலில் குத்தியதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருபாகரன், மனைவி அம்சவேணி, 6 வயது மகள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதற்கிடையில் மது போதையில் இருந்தவர்களை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காரை ஓட்டிய 19 வயது ஆதித்யா என்பவர் ஓசூர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டும், ஹரிஷ், ரிதிக்குமார் ஆகியோர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டும் படித்து வருவதும் தெரியவந்தது.
ஆதித்யாவின் தந்தை சீனிவாசன் என்கிற மால்கிரி சீனா என்பதும், ஓசூர் நகராட்சியின் முன்னாள் திமுக கவுன்சிலரான இவர் தற்போது திமுகவில் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில், ரியல் எஸ்டேட் என செல்வாக்கோடு இருக்கும் மால்கிரி சீனாவும் அவரது ஆதரவாளர்களும் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
மேலும் இந்த செய்தி வெளியே வந்தால் கட்சியின் தலைமைக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும், தேர்தல் நேரத்தில் எதற்கு இந்த தேவையில்லாத வேலை என நினைத்து ஓசூரில் உள்ள சில தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை நிருபர்களை அழைத்த மால்கிரி சீனா 23ம் தேதி ஓசூரில் உள்ள பிரபல ஓட்டலில் மதிய விருந்து வைத்து குறிப்பிட்ட தொகையை கையூட்டாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
அதே போல் போலீசாரும் தேர்தல் நேரம் என்பதால் குற்றவாளிகளின் புகைப்படங்களோ, சிசிடிவி ஆதாரங்களோ யாருக்கும் கிடைத்துவிடக்கூடாது என ஆதாரங்களை அழிப்பதிலேயே குறியாக இருந்து சம்பந்த இடத்தில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி அதில் இருந்த வீடியோக்களை அழித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிசிடிவி கேமிராவின் டிவிஆரை பறிமுதல் செய்த டவுன் போலீசார் அவற்றை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
எப்.ஐ.ஆரில். சாட்சிகளை சேர்க்க அந்த பகுதிக்கு போலீசார் சென்ற போது சாட்சி சொல்ல கூட யாருமே முன் வரவில்லை. சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் கூட எங்களுக்கு எதுவும் தெரியாது என பின்வாங்கியுள்ளனர். பணபலமும், படைபலமும் உள்ள ஒருவர் என்பதால் சாட்சி சொல்ல கூட தயங்கும் நிலையில் ஆடியோ, வீடியோ, சிசிடிவி என எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியே விடாமல் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் தற்போது சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய உயிரிழந்த சிவமூர்த்தியின் மூத்த மகன் கிருபாகரன், அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவத்தை பார்த்த போதும், பயந்து கொண்டு ஒருவர் கூட சாட்சி சொல்ல வரவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கொலை செய்ய பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், கைதான மூவரையும் தருமபுரி சிறையில் அடைத்தனர். ஆளும் கட்சி, எதிர்கட்சி, பணபலம் உள்ளவர்கள், படை பலம் உள்ளவர்கள் என்று பார்க்காமல் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உண்மையை மறைக்க முயலாமல், முறையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் உரிய தண்டனையை நீதியரசர்களிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
கடந்த வாரம் காவேரிப்பட்டினத்தில் அங்காளம்மன் கோவில் மாயான கொள்ளை திருவிழாவில் அரசியல்வாதியின் மகன் 15 பேரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு அரசியல்வாதியின் மகன் கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu