BIG STORIES
அரசுப் பள்ளி வாத்தியை வீட்டில் புதைத்த திகில்..! கறி குழம்பிற்கு வந்த பெரிய பூனை.. க...காதலிக்கு தண்டனை அறிவிப்பு.!
Nov 13, 2025 05:45 AM
261
அரசுப் பள்ளி வாத்தியை வீட்டில் புதைத்த திகில்..! கறி குழம்பிற்கு வந்த பெரிய பூனை..
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ் - அனுஷா தம்பதியினர். சந்தோஷிற்கு, தென்காசி அருகே புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்ததால், இராமசந்திரபட்டினம் மெயின்ரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியோடு தங்கி வந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் தேதியன்று வீட்டில் இருந்து வெளியேறிய தனது கணவர் சந்தோஷ், வீடு திரும்பவில்லை என அனுஷா பதறியடித்துக் கொண்டு பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது, அரசு பள்ளி ஆசிரியர் சந்தோஷிற்கும், அவரது வீட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த பொன்செல்வி என்பவருக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் பொன்செல்வியை பிடித்து தங்களது பாணியில் விசாரித்தபோது பல திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
சந்தோஷ் இராமசந்திரபட்டினம் மெயின்ரோடு பகுதியில் வசிப்பதற்கு முன்பு, பாவூர்சத்திரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியோடு வசித்து வந்துள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டில் பொன்செல்வி என்பவர் தனது குழந்தைகளோடு வசித்து வந்தார். பொன்செல்வியின் கணவர் அபுதாபியில் போர்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது பக்கத்து வீடு என்பதால், சந்தோஷின் மனைவி அனுஷாவிற்கும், பொன்செல்விக்கும் நல்ல நட்பு இருந்து வந்துள்ளது. இதனால் அனுஷா வீட்டிற்கு பொன்செல்வி செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அப்போது தான் சந்தோஷிற்கும், பொன்செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, பின்பு நாளடைவில் அது தகாத உறவாக மாறியுள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பொன்செல்வி, பாவூர்சத்திரம் சாலையில் வீடு ஒன்றை கட்டி அங்கு குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். சந்தோஷும் அங்கிருந்து இராமசந்திரபட்டினம் மெயின்ரோடு பகுதியில் வாடகை வீட்டிற்கு மாறியுள்ளார்.
இருவரும் வேறு இடத்திற்கு மாறிய பின்னரும், இவர்களின் தகாத உறவு தொடந்து வந்துள்ளது. இந்நிலையில், பொன்செல்விக்கு வேறு சில ஆண்களோடு பழக்கம் ஏற்பட்டதாகவும், அது சந்தோஷிற்கு தெரியவந்து, இனி மற்ற ஆண்களோடு நீ பழக கூடாது என கட்டளையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, "இனி நீ குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு என்னோடு வந்துவிடு, இருவரும் தனியாக அறை எடுத்து ரகசியமாக வாழ்க்கை நடத்தி வரலாம்" என தொடர்ந்து பொன்செல்வியிடம் சந்தோஷ் கூறி வந்துள்ளார்.
இதனால் பொன்செல்வி ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதே நேரத்தில் அபுதாபியில் வேலை பார்த்து வரும் கணவன் இன்னும் 2 வாரத்தில் ஊருக்கு வர உள்ளதால், அதற்குள் எதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் கணவனிடம் சிக்கிக் கொள்வோம் என நினைத்த பொன்செல்வி, இது குறித்து தனது தம்பி முருகன் மற்றும் தந்தை தங்கப்பாண்டியிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் மூவரும் சேர்ந்து ஒரு ரகசிய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி பிப்ரவரி 4 ஆம் தேதியன்று, பொன்செல்வியின் வீட்டிற்கு பின்பு ஒரு குழியை தோண்டியுள்ளனர். பின்னர் குழியை மூவரும் சரிபார்த்து விட்டு, பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுகிழமையன்று, சந்தோஷை கறி விருந்திற்கு வீட்டிற்கு அழைத்து வருமாறு, பொன்செல்வியிடம் தம்பியும், தந்தையும் கூறியுள்ளனர்.
பொன்செல்வியும் தனது ரகசிய காதலனான சந்தோஷை கறி விருந்திற்கு வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது தம்பியும்,தந்தையும் பொன்செல்வியின் வீட்டின் அருகே மறைந்திருந்துள்ளனர். வீட்டிற்கு வந்த சந்தோஷிற்கு பொன்செல்வி மது பாட்டிலை கொடுத்து மது அருந்த வைத்துள்ளார். பின்னர் கோழி கறியையும் பரிமாறியுள்ளார்.
மது அருந்திய சிறிது நேரத்திற்கு பின்பு தான் மதுவில் விஷம் கலந்திருப்பதை உணர்ந்த சந்தோஷ், வலி தாங்காமல் அலறி துடித்துள்ளார். எங்கு சத்தம் கேட்டால் திட்டமே சொதப்பிவிடும் என முருகனும் தங்கப்பாண்டியும் சத்தம் வெளியே கேட்காதவாறு, கதவை வெளிப்பக்கமாக பூட்டியுள்ளனர்.
பின்னர் 3 மணி அளவில் சந்தோஷ் மயங்கி, உயிரிழந்துள்ளார். சந்தோஷ் உயிரிழந்த பின்னர், உடலை பக்கத்து அறையில் வைத்து பூட்டியுள்ளனர். பொன்செல்வியின் குழந்தைகள் டியூசன் படிப்பதற்காக வெளியே சென்ற நிலையில், மாலை 7 மணி அளவில் மூவரும் சேர்ந்து சந்தோஷின் உடலை தூக்கிக்கொண்டு, வீட்டின் பின்பக்கம் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த புதை குழியில் உடலை போட்டு மண்ணால் மூடியுள்ளனர். இவை அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சந்தோஷ் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் தோண்டி எடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொன்செல்வி மற்றும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தம்பி முருகன், தந்தை தங்கப்பாண்டி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவு பெற்று தற்போது பொன்செல்வி, முருகன், தங்கபாண்டியன் ஆகிய மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி மனோஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
காதல் மோகத்தில் செய்தாலும் .. உணர்ச்சிவசப்பட்டு வேகத்தில் செய்தாலும் குற்றம் கேடு தரும்.!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu