முகப்பு
விமான விபத்தில் மராட்டிய துணை முதல்வர் மரணம்.. மராத்தியர்களால் 'தாதா' என அழைக்கப்பட்ட அஜித் பவார்.. அரை மணி நேரத்தில் நடந்து முடிந்த கோர விபத்து
Jan 28, 2026 04:27 AM
136
மராட்டிய மாநிலம் பாராமதியில் நேர்ந்த விமான விபத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் பாராமதியில் நேரிட்ட விமான விபத்தில், அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலையால், இரண்டாவது முறையை தரையிறங்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி அஜித் பவாரை காவு கொண்டிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் இருந்து 8 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்றில், அஜித் பவார், பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை பயணமானார். காலை 8.15 மணிக்கு, மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், காலை 8.45 மணிக்கு பாராமதி விமான நிலைய எல்லைக்குள் வந்த நிலையில், விபத்திற்குள்ளானது. பாராமதி விமான நிலைய ஓடுபாதையை நெருங்கிய விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்து புகை மூட்டம் சூழ்ந்த பதைபதைக்கும் காட்சி வெளியானது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்ட விமான விபத்தில், மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார், அவரது உதவியாளர்கள் இருவர், கட்சி நிர்வாகி, விமான பைலட்டுகள் இருவர் என 6 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர். அஜித் பவார் மற்றும் விமானத்தில் இருந்த ஐவரின் மரணங்களை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், விபத்துக்கு காரணம், பனிமூட்டமா? அல்லது தொழில்நுட்பக் கோளாறா? என்று ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
அஜித் பவாரின் அகால மரணத்திற்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவீஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், விமான விபத்துக்கு பிந்தைய நிலவரம் குறித்து விசாரித்து அறிந்தார்.
அஜித் பவாரை பலிகொண்ட விமானம், விபத்துக்குள்ளானது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பிற்கு காரணமான, விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் லியர்ஜெட்-45 என்ற சிறிய ரக விமானம், கடந்த 2023ஆம் ஆண்டு, மும்பையில், பலத்த மழைக்கு மத்தியில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று தரையில் மோதி சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை, அஜித் பவார் உள்ளிட்டோருடன் வந்த விமானம், ஓடுபாதைக்கு மிக அருகில் வந்துவிட்ட நிலையில், 100 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே விழுந்து, தரையில் மோதி தீப்பிடித்ததாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மோசனமான வானிலையால், பாராமதி விமான நிலையத்தில் விமான அவசரமாக தரையிறக்க முற்பட்டபோது தான், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்து பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
மும்பையிலிருந்து வந்த நிலையில், பாராமதி விமான நிலையத்தில், விமானம் தரையிறங்க முயன்றுள்ளது. மோசமான வானிலையால், தரையிறங்க அனுமதி கிடைக்காததால், பாராமதி விமான நிலையத்தை சுற்றி வட்டமடித்துள்ளது. பின்னர், 2ஆவது முறையாக தரையிறங்க முயன்றபோது தான், திடீரென கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக, ஃபிளைட் ரேடார்ஸ் இணைய தகவல்கள் கூறுகின்றன. ஓடுபாதைக்கு மிக அருகே வந்து, தரையில் மோதிய விமானத்தில் பற்றிய தீ, நெருங்க முடியாத அளவிற்கு கொளுந்துவிட்டு எரிந்ததால், விமான விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியவில்லை என அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu