BIG STORIES
“தம்பி அந்த கேக்கை சாப்பிடாதடா...” பள்ளியின் லஞ்ச் பிரேக்கில் முகம் வீங்கி கீழே சரிந்த 2-ஆம் வகுப்பு மாணவன்.. Heart Break பின்னணி
Sep 25, 2025 07:53 AM
283
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் பகுதி சேர்ந்தவர் மணிகண்டன் - தீபலட்சுமி தம்பதியர். இவர்களது 8 வயது மகள் சன்விதா, 7 வயது மகன் மிதுன் இருவரும் காவனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இதில் சிறுவன் மித்துன் இரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளான். மேலும் மிதுன் உணவு இடைவேளையில் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவை உட்கொண்டு வகுப்பறைக்கு செல்ல தயாராகியுள்ளான்.
திடீரென, மிதுனின் முகம் மற்றும் கண், வயிறு உள்ளிட்ட பகுதிகள் சட்டென்று வீங்கத் துவங்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ந்த ஆசிரியர்கள் மிதுனை உடனடியாக, அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, முதலுதவி வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் மிதுனை பரிசோதித்த மருத்துவர்கள், உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுத்த காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை காவல் டி எஸ் பி இமயவர்மன் தலைமையிலான போலீசார், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் சிறுவனின் பெற்றோரிடம் போலீஸார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் சிறுவன் மித்துன் உணவு இடைவேளைக்கு முன்பு 11.30 மணியளவில் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கேக்கை உட்கொண்டதாகவும் அதன் பிறகு உணவு இடைவேளையின்போது இட்லி சாப்பிட்டதைத் தொடர்ந்து, முகம் வீக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சிறுவன் சாப்பிட்ட கேக், கடந்த 5 நாட்களுக்கு முன்பு தாமரைப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அம்பாள் பேக்கரியில் வாங்கிய கேக் எனவும், ஃபிரிட்ஜில் வைத்திருந்து, சிறுவன் மிதுன் மற்றும் அவனது அக்கா ஆகியோருக்கு பள்ளி இடைவேளையில் உட்கொள்ள கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து, சிறுவனின் அக்கா காவல்துறையிடம் தெரிவிக்கையில் “பள்ளியில் கேக்கை சாப்பிட எடுத்ததாகவும் அதில் துர்நாற்றம் வீசியதால் அதை சாப்பிடாமல் தூக்கி எறிந்ததாகவும் தம்பியை சாப்பிடக்கூடாது என சொல்வதற்கு முன்பே சாப்பிட்டு இப்படி ஆகிவிட்டது எனவும் கதறி துடித்திருக்கிறார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திமிரி போலீசார், உணவு பாதுகாப்புத்துறை உதவியோடு அம்பாள் பேக்கரிக்கு சீல் வைத்தனர். மேலும் பேக்கரி உரிமையாளர், பள்ளி நிர்வாகம் மற்றும் சிறுவனின் பெற்றோரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே கேக் சாப்பிட்டது காரணமா? ஃபுட் பாய்சன் ஆகி சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இரண்டாம் வகுப்பு படித்த ஏழு வயது சிறுவன் பள்ளி உணவு இடைவேளையில், முகம் வீங்கி உயிரிழந்த சம்பவம் திமிரி தாமரைப்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ராணிப்பேட்டை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சுதாகரைத் தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “கேக் தயார் செய்தபிறகு அதிகபட்சம் பேக்கிரிகளில் சரியான வெப்பநிலையில், மூன்று நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
அதை, நாம் வாங்கிவந்த பிறகு உடனே சாப்பிட்டு விட வேண்டும். ஒருவேளை ஃபிரிட்ஜில் வைத்தால், மறுநாள் காலையிலேயே சாப்பிட்டுவிடவேண்டும். பேக்கிரியில் கேக் எப்போது தயாரிக்கப்பட்டது? சிறுவனின் வீட்டில் எப்போது வாங்கிவந்தார்கள்? எத்தனை நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தார்கள்? என விசாரணை நடத்தி வருகிறோம்.
முழுமையான விசாரணைக்குப்பிறகு உண்மை தெரியவரும்” என்கிறார் அவர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu