BIG STORIES
பூமியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கப் போகும் 'நிசார்'..! 740 கி.மீ.க்கு அப்பால் நிலைநிறுத்த தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி.!!
Jul 30, 2025 01:10 AM
65
பூமியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கப் போகும் 'நிசார்'..!
புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கி உள்ள அதி நவீன நிசார் செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று மாலை விண்ணில் செலுத்த உள்ளது.
பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-இல் கையெழுத்தானது. இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டுழைப்பில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிசார் செயற்கைக் கோள் கடந்தாண்டு உருவாக்கி முடிக்கப்பட்டது.
நிசார் செயற்கைக்கோளுக்கு ஒரு எல் பேண்ட் சிந்தெடிக் அபெர்ச்சர் ரேடார், ஒரு ஜி.பி.எஸ். ரிசீவர், செயற்கைக்கோளின் ஹார்ட் டிரைவான சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் உள்ளிட்டவற்றை நாசா வழங்கியுள்ளது. எஸ் பேண்ட் எஸ்.ஏ.ஆர் ரேடாரை சொந்தமாக தயாரித்துள்ள இஸ்ரோ, செயற்கைக்கோளின் பாகங்களை ஒருங்கிணைத்து ஏவும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய இரு அலைவரிசைகள் கொண்ட ரேடார்கள் ஒரே செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படுவது உலகில் இதுவே முதன்முறையாகும்.
பல கட்ட சோதனைகள் முடிந்த நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எஃப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக கவுண்ட் டவுன் நடைபெற்று வரும் நிலையில் ஆயத்தப் பணிகளில் விஞ்ஞானிகள் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர்.
2 ஆயிரத்து 392 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள், பூமியில் இருந்து 743 கிலோ மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. விண்ணில் சுற்றத் துவங்கியதும் நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பை முழுவதுமாக ஸ்கேன் செய்து மிகத்துல்லியமான படங்களை பூமிக்கு அனுப்பும்.
அந்த ஒளிப்படங்கள் மூலம் பூமியின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட தகவல்களை பெறமுடியும். அதாவது, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு முன்னரும் பின்னரும் நிலப்பரப்பில் நடக்கும் மாற்றங்களைப் பார்க்கவும், பனிப் பாறைகளின் நகர்வுகளைக் காணவும், காடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கவும் இயலும். பூமியின் மேற்பரப்பில் ஒரே ஒரு அங்குல நிலத்தில் நிகழும் சிறிய அசைவுகளைக்கூட நிசார் செயற்கைக் கோள் மிகத் துல்லியமாகக் படம் பிடித்து அனுப்பும்.
இது தவிர, பயிர்களின் வளர்ச்சி, தாவரங்களின் ஆரோக்கியம், மண்ணின் ஈரப்பதம் போன்ற விவசாயத்துக்கு முக்கியமான தகவல்களையும் நிசார் செயற்கைக்கோள் அனுப்பும். இதன் மூலம் உலகெங்கும் உள்ள விவசாயிகள் தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து வேளாண்மையில் ஈடுபடவும் முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக அந்த அளவுக்குத் தெளிவான ஒளிப்படங்களைப் பெற வேண்டும் என்றால், ஒரு செயற்கைக்கோளுக்கு பல கிலோ மீட்டர் அகலமுள்ள ரேடார் ஆன்டனா தேவைப்படும். ஆனால், நிசார் செயற்கைக்கோளில், வெறும் 12 மீட்டர் அகலம் கொண்ட ஆன்டனாவால் இதை சாத்தியமாக்க முடிவதற்கு காரணம், அதில் உள்ள சிந்தெடிக் அபெர்ச்சர் ரேடார் தான்.
சூரிய ஒளியைச் சார்ந்து செயல்படும் வழக்கமான கேமராக்களை போல் இல்லாமல் நிசாரில் உள்ள எஸ்.ஏ.ஆர். ரேடார், பூமியின் மேற்பரப்பை நோக்கி தனது சொந்த மைக்ரோவேவ் சிக்னல்களை அனுப்புகிறது. இந்த சிக்னல்கள் மலைகள், காடுகள், மண்பரப்புகள் ஆகியவற்றில் மோதும். அதன் பிறகு எவ்வளவு சிக்னல் செயற்கைக்கோளுக்கு திரும்பி வருகிறது என்பதை அளவிட்டு சென்சார்கள் தரவுகளைச் சேகரிக்கும். படிப்படியாக பல அளவீடுகளை சேகரித்து மேம்பட்ட கணினி மூலம் ஒருங்கிணைத்து மிகத்தெளிவான படங்களை பூமிக்கு அனுப்பி வைக்கும்.
நிசார் செயற்கைக்கோள் மூலம் 3 முதல் 5 ஆண்டுகள் பூமியின் மாறிவரும் சூழல்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோ மற்றும் நாசா திட்டமிட்டுள்ளது. இரவு பகல் பாராமல், அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பூமியை கண்காணிக்கும் நிசார் செயற்கைக் கோள் மூலம் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு தரவுகள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu