RECENT NEWS

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகப்பு

சிவாஜி சொத்து குலநாசம்? சகோதரிகள் வழக்கு... ராம்குமார் வாங்கிய கடன்... தப்பிக்குமா ‘அன்னை இல்லம்’?

Apr 12, 2025 01:12 PM

66

சிவாஜி சொத்து குலநாசம்? சகோதரிகள் வழக்கு... ராம்குமார் வாங்கிய கடன்... தப்பிக்குமா ‘அன்னை இல்லம்’?

சிவாஜி சொத்து குலநாசம்?..தப்பிக்குமா ‘அன்னை இல்லம்’?

“ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக, பாடு பண் பாடு...இரை தேட பறந்தாலும், திசை மாறி திரிந்தாலும், கூடு ஒரு கூடு...” என்று பாடலுக்கு உயிரூட்டி நடித்த சிவாஜி கணேசனின் “கூட்டிற்கே” இப்படியொரு சிக்கல் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதேபாடலில், “என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்” என பாடப்படும். ஆனால், அண்ணன் ராம்குமார் குடும்பத்தினர் வாங்கிய கடன் தான், சிவாஜியின் கூடாக இருந்த அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் அளவுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டது.



ஏற்கனவே, ராம்குமார்- பிரபு மீது சகோதரிகள் தொடுத்த வழக்கு... ராம்குமாரின் மகன் ‘ஜெகஜால கில்லாடி’ படத்திற்காக வாங்கிய கடனால் ‘அன்னை இல்லம்’ ஜப்தி... தொடர்ந்து சிவாஜியின் குடும்பம், சொத்து பிரச்சனையால் “வியட்நாம் வீடாக” மாறிக்கொண்டிருக்கிறது. சிவாஜியின் சொத்துக்கள் எவ்வளவு? அதன் மதிப்புகள் என்ன? சகோதரிகள் வழக்கு தொடுத்த பின்னணி என்ன? ராம்குமார் குடும்பத்தார் வாங்கிய கடன்கள் என்ன? நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்ட சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ ஜப்தியிலிருந்து தப்பிக்குமா? என்பதைக் குறித்து விளக்குகிறது, இந்த செய்தி தொகுப்பு...



நடிகர் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், நடிகர் பிரபு என இரண்டு மகனகளும் சாந்தி, ராஜ்வி என்கிற தேன்மொழி என இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் சாந்தி, டாக்டர் நாராயண சாமி, இளைய மகள் தேன்மொழி டாக்டர் கோவிந்தராஜன் என டாக்டர் சகோதர்களையே திருமணம் செய்துகொண்டனர். தனது மகள்கள், கணவர் வீட்டில் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே அண்ணன் -தம்பிக்கு தனது இரண்டு மகள்களை திருமணம் செய்துக்கொடுத்தார், சிவாஜி கணேசன்.



தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு உதாரணம் என்றால் அது சிவாஜியின் குடும்பத்தைதான் பெருமையோடு கூறுவார்கள். சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில், ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஒரு மினி வெள்ளை மாளிகையைப் போல் பளபளப்பாக ஜொலிக்கும் 'அன்னை இல்ல'த்தில், சிவாஜி மட்டுமல்லாது அவருடைய சகோதரர்கள் தங்கவேலு, சண்முகம் குடும்பம், தங்கை பத்மாவதி குடும்பத்தினர் என ஒரு காலத்தில் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என விக்ரமன் படக் காட்சிகள்போல், ஒற்றுமையாகக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

காரணம், சிவாஜி கணேசன் உயிரோடு இருக்கும்வரை, குடும்ப உறவுகளுக்குள் சின்ன உரசல்கள் ஏற்பட்டாலும் அரவணைத்து வழிநடத்தினார். அவரது, சொல்லுக்கு கட்டுப்பட்டு அனைவரும் ஒன்றாக இருந்தார்கள்.

மேலும், சிவாஜியின் மறைவுக்குப்பிறகே சில ஆண்டுகளுக்குப்பிறகும்கூட பிரச்சனை வெளியில் தெரியாமல் வாழ்ந்துவந்தார்கள். ஆனால், சிவாஜியின் சில சொத்துகளை விற்றபோதும், சில சொத்துகளை கைமாற்றியபோதும்தான், சிவாஜி குடும்பத்திற்குள் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது.



குறிப்பாக, சிவாஜியின் மகள்களான சாந்தி, தேன்மொழி இருவரும் சித்தப்பா சண்முகத்தின் குடும்பத்தினரிடமிருந்து விலக ஆரம்பித்தார்கள். சண்முகத்தின் பேரன், ஒரு வட இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். டெல்லியில் நடந்த அந்த திருமணத்துக்கு சாந்தியும் தேன்மொழியும் அழைக்கப்படவில்லை, எனக்கூறப்படுகிறது.



இதற்கிடையே, சொந்தம் விட்டுவிடக்கூடாது என்பதற்காக பிரபு தனது மகள் ஐஸ்வர்யாவை சகோதரி தேன்மொழியின் மகன் குணாலும் திருமணம் செய்துவைத்தார். ஆனால், அவர்களுக்குள் புரிதல் இல்லாததால் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கானவே, சொத்துப்பிரச்சனை நீருபூத்த நெருப்பாக தொடர்ந்துகொண்டிருந்த சூழலில், இவர்களது விவாகரத்து பிரச்சனையும் சேர்ந்துவிட, ‘நெருப்பு’ பிழம்பாக மாறி வெளியே வர ஆரம்பித்தது.

அப்போதுதான், சிவாஜியின் சொத்துக்கள் என்னென்ன? அதன் மதிப்புகள் என்னென்ன என்கிற தகவல்களும் வெளிவர ஆரம்பித்தன.



சாந்தி திரையரங்கு சென்னை அண்ணாசாலையில் இருந்தது. இந்த, சாந்தி தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 50 பங்குகள் சிவாஜி கணேசனின் பெயரிலும், 650 பங்குகள் அவரது கமலா கணேசனின் பெயரிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.82 கோடி
என்றும் இதில் தங்களது மதிப்பு பங்கு ரூ.41 கோடி என கூறினார்கள், சாந்தி- தேன்மொழி சகோதரிகள்.

அதேபோல், தஞ்சாவூர் சூரக்கோட்டை கிராமத்தில் 16.73 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலம் கமலா கணேசன் பெயரில் பதிவு செய்யப்பட்டது. இதன், மதிப்பு ரூ 2 கோடி. இதில் தங்களுக்கு சேரவேண்டியது ரூ 1 கோடி என குறிப்பிட்டார்கள்.



சிவாஜி கணேசன்1954 ஆம் ஆண்டு, ராயப்பேட்டையில் ஒரு சொத்து வாங்கினார், பின்னர் அதனை மேம்படுத்தினார். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தியாகராய நகரில் மிகப்பெரிய வீட்டை வாங்கினார்.
அதுதான், 'அன்னை இல்லம்' என பெயரிடப்பட்ட ஒரு வில்லா. சிவாஜி கணேசன் அவர் காலத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த வீடுதான் இது. பிரபுவும், ராம்குமாரும் குடும்பத்துடன் தற்போது இங்கு வசித்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.



1961 டிசம்பரில் சென்னை கோபாலபுரத்தில் சிவாஜி கணேசன் தனது மனைவி கமலா பெயரில் ஒரு சொத்தை வாங்கினார். பின்னர், அவர் ஒரு பில்டருடன் கூட்டு ஒப்பந்தம் செய்து பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, 'சிவாஜி என்கிளேவ்' எனப்படும் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த வளாகத்தில் சிவாஜி கணேசனும் அவரது மனைவியும் மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்று பிரபுவுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


ராயப்பேட்டையில் 17,122 சதுர அடி பரப்பளவில் உள்ள நான்கு வீடுகள் செப்டம்பர் 1956 இல் சிவாஜி கணேசனால் வாங்கப்பட்டது. இதில், ஒரு வீட்டில் மகள்கள் வசித்து வருகின்றனர். மற்ற மூன்று சொத்துக்களும் குத்தகைதாரர்களிடம் இருந்து வாடகை பெறப்படுகிறது. அது இரண்டு மகன்களின் பரமாரிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும், தங்களுக்கு சொந்தமான வாடகைப் பங்கை கொடுக்காமல் புறக்கணித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு ரூ 20 கோடி, தங்கள் பங்கு ரூ.10 கோடி என குறிப்பிட்டுள்ளார்கள்.



மணப்பாக்கம் மற்றும் ராமாபுரத்தில் உள்ள 43 ஏக்கர் நிலங்களை சிவாஜி கணேசன் தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர் பெயரிலும் "கூட்டுக் குடும்ப ஆதரவின்றி சொந்த வருமானத்தில் வாங்கியுள்ளார்" என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.90 கோடி. அதில், தங்களுக்கான பங்கு மதிப்பு ரூ 45 கோடி
என கூறப்பட்டுள்ளது. இப்படி, சிவாஜி கணேசனின் சொத்து மதிப்பு ரூ.270.60 கோடி என மகள்கள் சாந்தி, தேன்மொழி குறிப்பிட்டுள்ளனர்.



மேலும், சிவாஜி கணேசனின் சொத்துக்களில் வைரம் பதித்த 1,000 சவரன் தங்க ஆபரணங்கள் மற்றும் 500 கிலோ வெள்ளி பாத்திரங்களும் உள்ளடங்குவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள். பெற்றோர் இருவரும் இறந்த பிறகு நகைகள் மற்றும் பாத்திரங்களை இரு மகன்களும் எடுத்துச் சென்றதாகவும் அதன் மதிப்பு ரூ.10 கோடி என்றும் அதில் தங்களுக்கு சேரவேண்டியது ரூ.5 கோடி எனவும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தனர்.



இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, சாந்தி தியேட்டர் பங்குகளை தங்களுக்குத் தெரியாமலேயே ராம்குமாரும், பிரபுவும் ஒரு பில்டருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று சாந்தி, தேன்மொழி சகோதரிகள் இன்னொரு வழக்கும் தொடுத்தனர்.

அதாவது, சாந்தி தியேட்டர் நிறுவனத்தில் சிவாஜி, கமலா ஆகியோர் பெயரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அவர்களது மறைவுக்குப் பிறகு ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் தங்களுக்குத் தெரியாமலேயே விற்றுவிட்டனர், அங்கே கட்டுமானம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது வழக்கு.



இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். இந்த பரிவர்த்தனைகள் 2010 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதாகவும் குடும்பப் பிரச்சினை காரணமாக இப்போது வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என என்றும் அந்த இடத்தை வாங்கிய அக் ஷயா ஹோம் ரியல் எஸ்டேட் நிறுவனம் நீதிமன்றத்தில் வாதாடியது. இதனால், இந்த விவகாரத்தில் சிவாஜியின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இப்படி, தொடர்ந்து சொத்துப்பிரச்சனை ராம்குமார், பிரபுவுக்கு தலைவலியாக தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில்தான், சிவாஜியின் சொத்துகளை மையப்படுத்தி மீண்டும் ஒரு பிரச்சனை வந்தது. அதாவது,



சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரடக் ஷன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால்- நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தை தயாரித்தனர். இப்பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக்கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடன் தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். அதிலும் தீர்வு எட்டப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்யப்பட்டது.



இந்தநிலையில்தான், அன்னை இல்லம் வீடு தனது பெயரில் உள்ளதாகவும் அண்ணன் ராம்குமார் வாங்கிய கடனுக்கு தனக்கு சொந்தமான வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதுவும், தனது சகோதரர்
ராம்குமார் பெற்ற, மூன்று கோடி ரூபாய் கடனுக்காக தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் இதுபோன்று ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருப்பதால் அவர் வாங்கிய கடனை நான் அடைக்கமுடியாது என்று திட்டவிட்டமாக கூறினார்.



இதனைத் தொடர்ந்து, ராம்குமார் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பத்திரத்தில் அன்னை இல்லம் தனது தம்பி பிரபுவுக்கு, தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்து விட்டார் என்றும் அந்த வீட்டின் மீது தனக்கு எந்த பங்கும், உரிமையும் கிடையாது. எதிர்காலத்திலும், இந்த சொத்தின் மீது உரிமை கோர மாட்டேன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து வழக்கை வருகிற 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது, நீதிமன்றம்.



பிரபு பெயரில் இருக்கும் அன்னை இல்லத்தை மையப்படுத்தி ராம்குமார் குடும்பத்தினர் எப்படி கடன் வாங்கினார்கள்? ராம்குமார் வாங்கிய கடனுக்கு பிரபு பெயரில் உள்ள அன்னை இல்லத்தை ஜப்தி செய்த உத்தரவு நீக்கப்படுமா? பூட்டு போடப்பட்ட அன்னை இல்லம் திறக்கப்படுமா? என்பது வரும் 15 ஆம் தேதி முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.



ஆனாலும், சிவாஜி குடும்ப சொத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, சிவாஜி கணேசன் ஆசைப்பட்டதுபோலவே ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதையே விரும்புகிறார்கள், எதிர்பாக்கிறார்கள் திரையுலகத்தினரும் அவர்களது ரசிகர்களும்!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies