BIG STORIES
“அடையாறு அசிங்கம்” எப்படி வளர்த்தாங்க..? பெத்தவங்களை கேட்கவும்..! தூய்மை பணியாளர் ஆதங்கம்
Nov 11, 2025 01:40 AM
316
“அடையாறு அசிங்கம்” எப்படி வளர்த்தாங்க..? பெத்தவங்களை கேட்கவும்..! தூய்மை பணியாளர் ஆதங்கம்
சென்னையில் நள்ளிரவு நேரங்களில் தூய்மைப்பணியில் ஈடுபடும் பெண்களுக்கு அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் பெண் தூய்மை பணியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நடந்தது என்ன விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை அடையாறு எல்.பி சாலையில் சம்பவத்தன்று நள்ளிரவு பெண் தூய்மை பணியாளரிடம் இளைஞர் ஒருவர் அநாகரிகமாக நடந்துக் கொண்டதாகவும், அதற்கு அந்த பெண் துடைப்பாத்தால் அடித்து விரட்டியதாகவும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர், நள்ளிரவில் பணியாற்றும் எங்களுக்கு பாதுகாப்பு எதுவுமில்லை என்றார்.
நள்ளிரவு பணியில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்த ஒரு இளைஞர் என்னிடம் வந்து ஆபாச செய்கை காண்பித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும், கையில் இருந்த துடைப்பத்தால் அவனை அடித்து விரட்டியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
டிப்டாப்பாக இருந்த அந்த இளைஞருக்கு 25 வயது தான் இருக்கும் என்றும் , தனக்கே 30 வயதில் இரு மகன்கள் இருக்கும் நிலையில், ஒரு சின்ன பையன் இப்படி செய்வான் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அந்த தூய்மை பணியாளர் வேதனை தெரிவித்தார்
இந்த சம்பவம் தொடர்பாக தான் சூப்பர்வைசரிடம் புகார் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் கார் ஒன்றின் கேமராவில் பதிவான காட்சிகளை கொடுத்ததாகவும் அதனை ஆதாரமாக கொண்டு புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்
அந்த இடத்தில் போலீஸ் பேட்ரோல் வண்டி இல்லை எனவும் போலீஸ் வராத நேரம் பார்த்து தான் இது போன்ற நபர்கள் வருவதாகவும்
தனக்கு மட்டுமில்லை 3 பெண் தொழிலாளர்களுக்கு இதே நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அந்த தூய்மை பணியாளர், குறிப்பாக நான்கு பைக்குகளில் இளைஞர்கள் வந்து அட்ராசிட்டியிலும் ஈடுபடுவதாகவும் , தங்களுக்கு இந்த வேலையை விட்டால் வேறு தொழில் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஆபாச செய்கை செய்த இளைஞரின் வாகன பதிவெண் கர்நாடக பதிவெண் கொண்டது என்பதால் அதனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையில் அவன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாய் தேஜா என்பதும், பெருங்குடி பகுதியில் தங்கி உள்ள அவன், போரூரில் உள்ள தனியார் நிருவனத்தில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
தனியாக செல்லும் பெண்களை பார்த்து இது போன்ற ஆபாச செய்கை செய்வதை தொடர்ச்சியாக செய்து வந்ததும். அதே போல தனியாக நின்ற தூய்மை பணியாளரிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்று அடி விழுந்ததால் தப்பு ஓடியதும் தெரியவந்தது.
வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் மட்டுமல்ல மாநகராட்சி நிர்வாகமும் தூய்மை பணியாளர்களுக்கு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்..!
சுயக்கட்டுபாடின்றி இஷ்டத்துக்கு சுற்றி திரிவது மிருகங்களுக்கு வாடிக்கையாக இருக்கலாம், ஒரு சட்டத்துக்குள் சமூக ஒழுக்கத்துடன் இருப்பதே மனித இயல்பு...என்பது சுட்டிக்காட்டும் போலீசார் இது போன்ற தவறுகளை செய்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளனர். தறிகெட்டு செய்தாலும், தட்டி கேட்க யாரும் இல்லை என்று செய்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu