அமலா பள்ளியில் 65 வயது அரக்கனால் பாலியல் கொடுமை..! ஓட்டம் பிடித்த சிறுமிகள்

0 7001

விருத்தாசலம் அருகே, ஆதரவற்றோர் இல்லத்தில் அடைத்து வைத்து, அத்துமீறலில் ஈடுபட்ட 65 வயது பாலியல் அரக்கனுக்குப் பயந்து, 3 ஆதரவற்ற சிறுமிகள் தப்பிச்சென்று புகார் அளித்த நிலையில், தொல்லை கொடுத்த பள்ளித் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வீரரெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவர் அமலா என்ற பெயரில் சிறுவர் சிறுமியர் காப்பகத்துடன் கூடிய தொடக்கப் பள்ளி நடத்திவந்தார். இவரது காப்பகத்தில் இருந்து 12 வயது சிறுமிகள் மூவர் கடந்த மாதம் 25ந்தேதி மாயமாயினர். இது குறித்து பள்ளியின் தாளாளரான ஜேசுதாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

போலீசார் தேடி வந்த நிலையில், காப்பகத்தில் மாயமான 2 சிறுமிகள் சென்னையிலும் ஒரு சிறுமி அரியலூரிலும் மீட்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமிகள் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தனர்.

தங்கள் பள்ளியின் தாளாளரான ஜேசுதாஸ் தங்களிடம் தொடர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், உயிருக்குப் பயந்து தப்பி வந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடலூர் பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அந்த 3 சிறுமிகளும், தங்களுக்கு ஜேசுதாஸ் செய்த கொடுமைகள் குறித்து நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஜேசுதாஸை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த ஆலடி போலீசார், ஆதரவற்றோர் காப்பகம் என்ற பெயரில் சிறுமிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பாலியல் அரக்கனான 65 வயது ஜேசுதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில்அடைத்தனர்.

இதையடுத்து அவனது காப்பகத்தில் தங்கி இருந்த 40 சிறுவர்- சிறுமிகள் அரசுக் காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். இல்லாதோருக்கு உதவுவதாகக் கூறி, முறையான பதிவின்றி தன்னுடைய தகாத செயல்களுக்கு சிறுமிகளை காமுகன் ஜேசுதாஸ் கட்டாயப்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

சமூக நலத் துறை அதிகாரிகள் தங்கள் எல்லைக்குள் செயல்படும் அனைத்து ஆதரவற்றோர் மற்றும் சிறுவர் சிறுமிகள் காப்பகங்களுக்கும் அவ்வப்போது சென்று அவை முறையாக இயங்குகின்றனவா ? அங்கு ஏதாவது சட்ட விரோதச் செயல்கள் நடக்கின்றதா ? காப்பகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏதாவது அத்துமீறல்கள் நடக்கின்றதா ? என்பதை விசாரித்து ஆய்வு செய்து கண்டறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments