BIG STORIES
கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளைக்கு கச்சேரி..! ‘ஷேர் மார்க்கெட் சயின்டிஸ்ட்’..! விழுந்த அடியில் அலறி ஓடிய காட்சிகள்
Nov 26, 2025 01:28 AM
546
கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளைக்கு கச்சேரி..! ‘ஷேர் மார்க்கெட் சயின்டிஸ்ட்’..!
பல்லாவரம் அருகே பங்கு சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் ஈட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடிகளை சுருட்டிய இளைஞர் தலைமறைவான நிலையில், ஆடம்பரமாக திருமணம் செய்யும் தகவல் அறிந்து பாதிக்கப்பட்டவர்கள், அவரை தேடி பிடித்து , அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
‘சேர் மார்கெட் சையிண்டிஸ்ட்’ என்று யூடியூப்பர்களால் புகழப்பட்டதை நம்பி முதலீடு செய்து ஏமாந்தவர்கள் ஆலிவர் கிளிண்டனை , வெளுத்து விட்ட காட்சிகள் தான் இவை..!
சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆலிவர் கிளிண்டன். இவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் சகலகலா வல்லவன் எனக் கூறி, சில முன்னணி யூடியூப்பில் சேனல்களில் கோட் சூட் போட்டுக் கொண்டு பேட்டி எல்லாம் கொடுத்தார். பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை அள்ளுவது எப்படி ? என்று அள்ளிவிட்ட கதைகளை எல்லாம் நம்பி பலரும் இவரிடம் லட்சங்களை அள்ளிக் கொட்டியதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், இதனை நம்பி பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவர், கிளிண்டனுக்கு அறிமுகமானநிலையில் அவருக்கும் ,பங்கு சந்தை வர்த்தக வித்தையை கற்றுக் கொடுப்பதாக கூறி மோகன பிரியாவிடம் பணத்தை கறந்துள்ளார். பேராசை வார்த்தைகூறி, பங்கு சந்தையில் முதலீடு செய்து அதனை பல மடங்கு லாபம் ஈட்டி தருவதாக கூறி மோகன பிரியாவிடம் முதலில் 75 லட்சம் ரூபாயை வாங்கி உள்ளார்.
ஒரு கட்டத்தில் மோகன பிரியா கொடுத்த 75 லட்சம் பணமும் மொத்தமாக மூழ்கிபோனதாக கூறி கைவிரித்து உள்ளார். விட்ட இடத்தில் தான் பணத்தை எடுக்க வேண்டும் என்று கூறி மீண்டும் மோகனப்பிரியாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதையடுத்து மோகனப்பிரியா தனது ஆடி காரை விற்று 12 லட்ச ரூபாயை கிளைண்டனிடம் கொடுத்துள்ளாட். அந்தபணத்தையும் பங்கு வர்த்தக முதலீட்டில் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் மோகனப்பிரியாவின் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து,40 லட்சம் ரூபாயை வாங்கிய கிளிண்டன் அதையும் ஏமாற்றி ஏப்பம் விட்டதாக கூறப்படுகின்றது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகனப்பிரியா பல்லாவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் தான் கிளிண்டனை நம்பி வீதிக்கு வந்தோர் பலர் என்பது தெரியவந்தது.
பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் பல்லாவரம் குற்ற பிரிவு ஆய்வாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கை கிடப்பில் போட்டுள்ளார். பங்கு சந்தையில் முதலீடு செய்து பல கோடி ஏமாற்றிய கிளிண்டன் தலைமறைவானதாக கூரப்படுகின்றது
இந்த நிலையில் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண ஹாலில் ஆடம்பரமாக திருமணம் ஒன்று நடைபெற்றது. மண்டபத்துக்கு வெளியே ஷேர் மார்க்கெட் சைண்டிஸ்ட் ஆலிவர் கிளைண்டனின் படத்தை பார்த்ததும், இவரால் ஏமாற்றபட்ட பலர் ஒன்று கூடினர். கல்யாண மண்டபத்தில் மணமேடையில் மாப்பிள்ளை வரவேற்பு நிகழ்ச்சிக்கு கோட்டு சூட்டு போட்டு ஜம்மென்று நின்று கொண்டிருந்தவரை மடக்கிப்பிடித்து அடி வெளுத்தனர்
பணத்தை பறிகொடுத்தவர்கள் வைத்த கச்சேரியால் நிலைகுலைந்த புது மாப்பிள்ளை கிளிண்டன் அலறிக்கொண்டு அங்குமிங்குமாக ஓடினார் . விழுந்த அடியில் அவரது ஆடைகள் கிழிந்து தொங்கியது
இத்தனை களேபாரங்களையும் மேடையில் இருந்து பீதியுடன் மணமகள் பார்த்துக் கொண்டு இருந்தார்
பணத்தை இழந்தவர்கள் ஆக்ரோசமாக தாக்கியதில் மப்பிள்ளை முகத்தில் இருந்து ரத்தம் சொட்டியது, அங்கிருந்தவர்கள் மாப்பிள்ளையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தன்னை தாக்கியதாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் மோகனப்பிரியா உள்ளிட்டோர் மீது கிளிண்டன் புகார் அளித்தார். அதே போல தங்களை ஏமாற்றி பல கோடி பணத்தை சுருட்டியதாக கிளிண்டன் மீது மீண்டும் பல்லாவரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
கடந்த மாதம் தங்கள் பிடியில் சிக்கி காவல் நிலையம் அழைத்து வந்த போது, தன் மீது புகார் அளிக்க வேண்டாம் என்று பணமே இல்லாத வங்கியின் பெயரில் 3 பிளாங் செக் கொடுத்து ஏமாற்றியதாக கிளிண்டன் மீது குடியாத்ததை ஒருவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu