BIG STORIES
டிக்கெட் சேர்க்கும் வெறி.. ஓட்டுனரின் அதிவேகம்.. பலியான 7 உயிர்கள்.. விபத்துக்கு யார் பொறுப்பு?
Nov 24, 2025 02:14 PM
367
டிக்கெட் சேர்க்கும் வெறி.. ஓட்டுனரின் அதிவேகம்.. பலியான 7 உயிர்கள்.. விபத்துக்கு யார் பொறுப்பு?
தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே தறிகெட்டு வந்த தனியார் பேருந்து , மற்றொரு தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் 7 பயணிகள் உடல் நசுங்கி பலியாகினர்.. ஓட்டுனரின் அதிவேகத்தால் வளைவில் நிகழ்ந்த விபத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
தென்காசியில் இருந்து எம்.ஆர். கோபாலன் என்ற தனியார் பேருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து இடைக்கால் கிராமம் அடுத்த துரைச்சாமி புரம் அருகே உள்ள வளைவில் சென்ற போது , எதிரே ராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கி அதிவேகத்தில் வந்த கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து , எம்.ஆர் கோபாலன் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் இரு பேருந்துகளிலும் ஓட்டுனருக்கு பின்னால் உள்ள இருக்கைகளில் அமர்ந்திருந்த ஏராளமான பயணிகள் பேருந்து இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், காயம் அடைந்தவர்களை விரைவாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை 7 பேர் உடல் நசுங்கி பலியாகி உள்ளனர். 40க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இரு பேருந்து ஓட்டுனர்களும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் , மாவட்ட எஸ்.பி அரவிந்தன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதோடு, மருத்துவமனைக்கு சென்று காயம் பட்ட பயணிகளுக்கு ஆறுதல் கூறினர்.
முதற்கட்ட விசாரணையில், கே.எஸ்.ஆர் பேருந்து புறபட்ட நேரத்தில் இருந்தே அதிவேகத்தில் வந்ததாக அதில் பயணித்த அரசு ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். அந்த பேருந்து கடையநல்லூரை கடந்து சாலையில் அதிவேகத்தில் இயக்கப்பட்டதாகவும், துரைச்சாமி புரத்தில் உள்ள சிறிய சாலை வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே மிதமான வேகத்தில் வந்த எம்.ஆர்கோபாலன் பேருந்து மீது தறிகெட்டு சென்று மோதியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிவேக அரக்கனால் அப்பாவி உயிர்கள் பலியானதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்
இதையடுத்து கே.எஸ்.ஆர் பேருந்தின் வழித்தட உரிமத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, விபத்துக்கு காரணமான ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கே.எஸ்.ஆர் பேருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல தறிகெட்ட வேகத்தில் இயக்கப்பட்டு அரசு பேருந்து மீது மோதியதில் 3 பயணிகள் பலியானது குறிப்பிடதக்கது.
தங்கள் பேருந்துக்கு அதிகமாக டிக்கெட் சேர்த்தால் கமிஷன் கூடுதலாக கிடைக்கும் என்ற வெறியின் காரணமாகவே மற்ற பேருந்துகளை விட கே.எஸ்.ஆர் பேருந்து ஓட்டுனர், அதிவேகத்தில் பேருந்தை இயக்கி சென்றதாக பயணிகள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்களை அழைத்து , வேக கட்டுப்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu