முகப்பு
கலாசலா கலசலா... கல்லாச கலசலா..! சிம்பு பட தயாரிப்பாளர் ‘ட்ரக்’ ஆட்டம்.. கம்பி எண்ணப் போகும் நடிகர்-நடிகை.. கலக்கத்தில் அதிமுக இன்புலயன்சர்ஸ்
Nov 22, 2025 04:29 PM
332
கலாசலா கலசலா... கல்லாச கலசலா..! சிம்பு பட தயாரிப்பாளர் ‘ட்ரக்’ ஆட்டம்.. கம்பி எண்ணப் போகும் நடிகர்-நடிகை..
சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், சினிமா நடிகர், நடிகைகளின் ஆட்டம்- பாட்டம் கொண்டாட்ட பார்ட்டிகளில் விலையுயர்ந்த போதை பொருட்கள் புழங்குவதாகவும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, தியாகேஸ்வரன் என்பவரை 19 ஆம் தேதி பிடித்து விசாரித்தபோது, அவர் அளித்த வாக்குமூலத்தின் படி சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலுள்ள ஷர்புதீன் முகமது மஸ்தான், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சரத் மற்றும் முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் அவர்களும் பயன்படுத்தி வருவதாகவும் தெரியவந்தது.
அதாவது, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீஸார், ஷர்புதீன் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரைப் பிடித்து விசாரணை செய்தபோது, அவரது காரில் வைத்திருந்த 27 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் மற்றும் பார்ச்சுனார் காரும் கைப்பற்றப்பட்டது.
பின்னர், முகப்பேர் கிழக்கில் வசிக்கும் சீனிவாசனைப் பிடித்து விசாரணை செய்து அவரிடமிருந்து 10 கிராம் விலையுயர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது.
பின்னர், சரத் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஷர்புதீன், சீனிவாசன், சரத் ஆகிய மூவரையும் திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஷர்புதீன் முகமது மஸ்தான், சென்னை தேனாம்பேட்டையில் வசித்துவருவது தெரியவந்தது. சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதும் சிம்புவின் மேலாளராக இருந்தவர் எனவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, உயர்தர கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஷர்புதீனிடம் கைப்பற்றப்பட்ட 27 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் குறித்து விசாரணை மேற்கொண்ட போதுதான், அந்த பணம் அதிமுகவில் வியூக அமைப்பாளரான ஹரி பிரசாத் என்பவருடையது என விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மைப் பணியாற்றும் பிரமன்யா நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் சாய் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும், போதைப்பொருள் விற்பனையில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
இந்தநிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. "Un-uniform-ல் புகுந்து, எந்த காரணமும் கூறாமல், கைதா? கடத்தலா? என்று கூட தெரியாத அளவிற்கு காவல்துறையை கட்டவிழ்த்துள்ள அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக சட்டப் பிரிவு செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான இன்பதுரை, “அதிமுகவுக்காகப் பணியாற்றும் குழு உறுப்பினர்கள் மீது போலி கஞ்சா வழக்கைப் பதிவு செய்ய போலீசார் முயற்சிப்பதாக” குற்றம்சாட்டினார்.
மேலும், அவர் கூறும்போது “திருமங்கலத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட கஞ்சா வழக்குடன் இந்த கைது தொடர்புடையது என்றும், அதிமுக வியூகக் குழுவினர் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் கூறுகின்றனர். இது, திமுக அரசின் மூன்றாம் தர மலிவான தந்திரமாகும்.
கஞ்சா வழக்கு என்ற போர்வையில், அதிமுக வியூகங்களைக் கொண்ட மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதக் காவல் குறித்து எங்களுக்குத் தெளிவு வழங்கப்படவில்லை” என்று இன்பதுரை மற்றும் மூத்த அதிமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
“கட்சி பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம், மேலும் முதல்வர் ஸ்டாலின் கீழ் மட்டத்திற்குச் சென்று காவல் துறையைத் தூண்டிவிட்டார்.
இது நமது தேர்தல் தரவுகள், பிரச்சார உத்திகள் மற்றும் கூட்டணி வியூகத்தைத் திருடுவதற்கான, ஜனநாயக விரோதச் செயலாகும். அரசியல் தடுப்புக்காவலை முறியடிக்க நீதித்துறை தலையீட்டைக் கோரி நீதிமன்றத்தை அணுகுவோம்” எனவும் இன்பதுரை கூறியுள்ளார்.
இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஷர்புதீன் வீட்டில் ரெய்டு செய்த போலீஸார், சினிமா பிரபலங்கள் சர்புதீன் வீட்டில் நடைபெற்ற பார்ட்டியில் பங்கேற்று போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.
போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய சினிமா பிரபலங்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஷர்புதீன் வீட்டில் வார இறுதியில் நடைபெறும் பார்ட்டியில், சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்கள் பங்கேற்றுள்ளதாகவும், வார இறுதி பார்ட்டிகளில் கொக்கெய்ன், மெத்தம்பெட்டமைன், விலையுயர்ந்த கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளீயாகியுள்ளது.
ஷர்புதீனிடம் தீவிர விசாரணை நடத்தினால், பல தயாரிப்பாளர்கள், இளம் நடிகர்கள், சினிமா துறையில் உள்ள பெண்கள் பலர் சிக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu