ஈரோட்டிற்கு கொரோனாவை கூட்டிவந்த 5 பேர்..!
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தாய்லாந்தில் இருந்து ஈரோட்டிற்கு கொரோனாவை கொண்டு வந்த 5 பேரிடம் இருந்து, 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் செல்வோர் உறவினர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கி வந்த காலம் போய், நோய் தொற்றை பரிசாக கடல் கடந்து அழைத்து வரும் அவலம் அரங்கேறி வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், வெளி நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நோய் தொற்றை பெற்று வந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் ஈரோடு மாவட்டங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தி முடக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட நிலையில் ஈரோட்டிற்கு தாய்லாந்தில் இருந்து வந்த 5 பேர் கொண்ட குழுவினரால் கொரோனா தொற்று பரவியது எப்படி ? அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்தில் இருந்து கடந்த வாரம் கோவை விமான நிலையம் வந்த 5 பேர் குழுவில் 3 இளைஞர்களும் 2 பெரியவர்களும் இடம் பெற்று இருந்தனர். ஈரோட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் இருவர் மட்டும் தாய்லாந்து செல்ல கோவை விமான நிலையம் சென்ற போது தான், அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் கொரோனா அறிகுறி தென்பட்டதால் தனிமைபடுத்தப்பட்ட சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் வந்த 3 இளைஞர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் இதற்கு ஒத்துழைக்க மறுத்து அடக்குமுறை என ஆவேசம் ஆனதாக வேதனை தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள்.
பெரியவர்கள் இருவருக்கும் கொரோனா தாக்குதல் இருப்பது ஆய்வில் உறுதியான நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் 5 பேரும் ஈரோட்டில் சென்று வந்த வணிக நிறுவனங்கள், சந்தித்த நண்பர்கள், அவர்களை அழைத்துச்சென்ற கார் ஓட்டுனர், அந்த கார் ஓட்டுனர் மூலம் தொடர்புடையவர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் கிருமி பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்களை அடையாளம் கண்டு ஒவ்வொருவராக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து வந்த 5 பேரும், யார் ? யாருடன் தொடர்பில் இருந்தனர் ? என்ற தகவலை முழுமையாக அறிந்து கொள்ள இயலாததால் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், மாவட்ட நிர்வாகம் தீவிர நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தமிழக மக்கள் ஒன்றை உணரவேண்டும், கொரோனா தொட்டால் தொற்றிக் கொள்ளும் கொடூர வியாதி. இதனை ஆரம்பத்தில் கண்டறிந்தால் தப்பிக்க வழி உண்டு. முற்றினால் அதனை குணமாக்க மருந்து கிடையாது. எனவே பாதிக்கபடாமல் இருக்க, கைகளை சானிடைசர் அல்லது சோப்பு பயன்படுத்தி அவ்வப்போது கழுவிக் கொண்டு தனிமைப்படுத்தி கொள்வது அவசியம். அல்லது நீங்கள் கைவைக்கும் இடத்தில் இருந்து உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொரோனா கிருமி பரவக்கூடும்.
வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் உறவினர் மற்றும் நண்பருடன் கும்பலாக ஊர் சுற்றினால் நிச்சயம் கொரோனா கிருமி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இச்சூழலில் தனித்திருப்பதோடு கொரோனா குறித்த விழிப்புணர்வோடு இருப்பது காலத்தின் கட்டாயம்..!
Comments