தடுப்பூசி போடும் போது ஊசி உடைந்து குழந்தை உடலில் இருந்தது குறித்து பதிலளிக்க உத்தரவு

0 283

கோவை மேட்டுப்பாளையம் அருகே பச்சிளம் குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி உடைந்து உடலிலேயே இருந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எம்.எஸ்.ஆர்.புரத்தைச் சேர்ந்த பிரபாகரன், மலர்விழி தம்பதிக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தநிலையில் குழந்தைக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதி செவிலியர்கள் கை மற்றும் தொடையில் தடுப்பூசி ஊசி போட்டுள்ளனர்.

அப்போது தொடையில் போடப்பட்ட ஊசியின் ஒருபகுதி முறிந்து குழந்தையின் உடலிலேயே இருந்துள்ளது என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதை கவனிக்காமல் மலர்விழி மற்றும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

குழந்தையின் தொடையில் ஊசி சிக்கி இருந்தததால் அந்த பகுதியில் வீக்கம் ஏற்பட்டு குழந்தை அழுது கொண்டே இருந்ததநிலையில் குளிப்பாட்டும் போது ஊசி உடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்து அகற்றியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குழந்தையின் தாய் மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவரிடம் புகார் அளித்தார். மேலும் ஊடகங்கள் வாயிலாக குழந்தை உடலில் ஊசி இருந்த தகவல் பரவவே, மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் குழந்தைக்கு ஊசி போட்டப்போது மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியருக்கு மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவர் மூலம் விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊசி முறிவு எவ்வாறு நடந்தது, அதனை பரிசோதிக்க தவறியது யார் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments