மகாராஷ்ட்ரா முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை, ரூ 100 கோடி அபராதம்

0 585

மகாராஷ்டிராவில் நடைபெற்ற வீட்டு வசதி திட்ட ஊழல் வழக்கில் சிவசேனா கட்சியை சேர்ந்த அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தின் துலே மாவட்டத்தின், ஜல்கான் புறநகர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் தொகுப்பு வீடுகளை கட்டி, வீடற்ற மக்களுக்கு அளிப்பதற்காக 1990-ம் ஆண்டுவாக்கில் ’கார்குல் வீட்டு வசதி திட்டம்’ தொடங்கப்பட்டது.

அப்போது அம்மாநிலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த சுரேஷ் ஜெயின் மற்றும் சிலர் இந்த திட்டத்தில் சுமார் 29 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், கட்டுமான ஒப்பந்தக்காரருடன் சமரசம் செய்து, வெறும் 1500 வீடுகள் மட்டுமே கட்டியதை ஜலகான் நகராட்சி மன்ற கமிஷனராக பொறுப்பேற்ற பர்வின் கெடாம் என்பவர் கண்டுபிடித்து 2006-ம் ஆண்டுவாக்கில் போலீசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சிவசேனா கட்சியை சேர்ந்த சுரேஷ் ஜெயினை 2012-ம் ஆண்டு கைது செய்தனர். அப்போது அவர் மகாராஷ்டிரா மாநில அரசில் அமைச்சராக பதவி வகித்தார். சுமார் ஓராண்டு சிறைவாசத்துக்கு பின்னர் உச்சநீதிமன்றம் மூலம் ஜாமின் பெற்ற சுரேஷ் ஜெயின் விடுதலையாகி, வழக்கை எதிர்கொண்டார்.

இதே வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முன்னாள் அமைச்சர் குலாப்ராவ் டியோகர் உள்பட மொத்தம் 48 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு துலே மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுருஷ்ட்டி நீல்காந்த், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ஜெயினுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மற்றொரு முன்னாள் அமைச்சரான குலாப்ராவ் டியோகருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் உள்பட 46 பேருக்கு மூன்றாண்டு முதல் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments