பேரிடர் மேலாண்மையில் புதிய வழிமுறை...

0 403

பேரிடர் மேலாண்மையிலும், நிவாரண பணிகளிலும் சர்வதேச அளவிலான கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஜி-20 நாடுகள் மாநாட்டில் இதனை கூறிய மோடி, ஒரே நாளில் ஆறு நாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு இரு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல் நாளில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாநாட்டின் இரண்டாவது மற்றும் நிறைவு நாளான சனிக்கிழமை அன்று, காலை 9 மணிக்கு இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடாடோவையும், காலை 9.20 மணிக்கு பிரேசில் அதிபர் ஜேர் பொல்சோனரோவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

காலை 9.40 மணிக்கு நடைபெற்ற பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோடி, சர்வதேச அளவில் மகளிரின் நிலை மேம்பட ஜி 20 நாடுகள் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என்றார்.

காலை 10 மணிக்கு நடைபெற்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையான உலகம் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் மோடி பங்கேற்றார்.

இதன் பின்னர் காலை 11.15 மணிக்கு இத்தாலி பிரதமர் கியூசெப்பி கான்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய மோடி, முற்பகல் 11.35 மணிக்கு துருக்கி அதிபர் தய்யீப் எர்டோகனை சந்தித்தார். முற்பகல் 11.55 மணிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் மற்றும் சிலி அதிபர் செபாஸ்டியன் பினெரா ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மதியம் 12.15 மணிக்கு மதிய உணவுக்கு பின்னர் நடைபெற்ற பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி இயற்கையாலோ, மனிதர்களாலோ ஏற்படும் பேரழிவுகளில் இருந்து உடனடியாக மீள தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார்.

இதற்காக ஜி 20 நாடுகள் சர்வதேச அளவில் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பேரிடரில் இருந்து உடனடியாக மீளவும், மறு சீரமைப்பு பணிகளை மிக துரிதமாக செய்யவும் தேவையான தொழில் நுட்பம், செயல் திட்டம் ஆகியவற்றை ஜி 20 நாடுகள் ஒன்றிணைந்து வகுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். 

மதியம் 1.15 மணிக்கு ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அத்துடன் மாநாடு நிறைவு பெற்ற நிலையில் மதியம் 2.35 மணிக்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசனை மோடி சந்தித்தார். சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 6 நாட்டு தலைவர்களை சந்தித்த மோடி, அந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் சிறப்பு ஒத்துழைப்பு, காலநிலை மாற்றத்தின் பின்னணியில் விவசாயம் மற்றும் உயிர் எரிபொருள்கள், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் அவர் ஒசாகாவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments