BIG STORIES
காலமானார் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி..!
Jul 14, 2025 09:43 AM
201
கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக பெங்களூருவின் மல்லேஸ்வரத்தில் காலமானார் அவருக்கு வயது 87. தமிழ் திரை ரசிகர்களை விழி அசைவில் கட்டிப்போட்ட அபிநாய சரஸ்வதியின் திரைப்பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
பெங்களூருவில் 1938 ஆம் ஆண்டு காவலரான பைரப்பா ருத்ரம்மா தம்பதியரின் 4 வது மகளாக பிறந்தவர் ராதா தேவி என்கிற சரோஜாதேவி..!
1955 ஆம் ஆண்டு மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையில் அடி எடுத்து வைத்த, சரோஜாதேவி 1958 இல் வெளியான எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தன் விழி அசைவில் தமிழ் ரசிகர்களை கட்டி போட்டார்
1959ல் வெளியான கல்யாண பரிசு படம் அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.
எம்ஜிஆர் உடன் மட்டும் 26 படங்களில் நாயகியாக நடித்துள்ளார் சரோஜாதேவி
குறிப்பாக திருடாதே, நான் ஆணையிட்டால், தாய் சொல்லை தட்டாதே, தெய்வத் தாய், அன்பே வா படகோட்டி , பணம் , ஆசை முகம் என இருவரும் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி படங்கள்
எம்ஜிஆர் உடன் சரோஜாதேவி நடித்த அன்பே வா படத்தில் அவருக்கான உடைகளை தைப்பதற்கு என்று அவரைப் போலவே ஒரு சிலையை வடித்து அந்த சிலைக்கு அளவெடுத்து உடைகளை தயாரித்து சரோஜாதேவிக்கு கொடுக்க, ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அறிவுறுத்தியதாக சரோஜாதேவி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்
எம்ஜிஆர் திரையுலக வாழ்க்கையில் மிகச் சிறந்த காதல் படமாக அன்பே வா அமைய படத்தில் சரோஜா தேவியின் இணக்கமான நடிப்பு முக்கிய காரணமாக அமைந்தது
பணம் படத்தில் எம்ஜிஆர் சரோஜா தேவியின் பால் வர்ணம் ... பாடல் இன்றளவும் விரும்பி ரசிக்கப்படும் மெலோடியாக உள்ளது
எம்ஜிஆர் உடன் நிறைய படங்களில் நடித்த அதே நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடனும் ஜோடி சேர்ந்து அவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்கள் ஆயின.
சிவாஜி கணேசனுடன் அவர் நடித்த ஆலயமணி, பாகப்பிரிவினை, பாலும் பழமும், புதிய பறவை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது
புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பிற்கு ஈடு கொடுத்து சரோஜாதேவி தன்னுடைய நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
புதிய பறவை படத்தின் பாடல்களிலும் அவரது அபிநயங்கள் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்திருந்தது
சிவாஜி கணேசன் உடன் பாகப்பிரிவினை படத்தில் சரோஜாதேவியின் நடிப்பு ரசிகர்களை கலங்க செய்தது
இருவர் உள்ளம் படத்தில் சிவாஜி கணேசன் சரோஜா தேவி தோன்றும் கண்ணெதிரே தோன்றினாள் பாடல் காட்சி இன்று இயக்குநர்களுக்கு காதல் படம் எடுக்க பாடமாக அமைந்தது
இருவர் உள்ளம் படத்தின் நீட்சியாக தான் சரோஜாதேவி சிவாஜி கணேசன் ஆகியோர் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கும்
ஜெமினி கணேசன் முத்துராமன் ஏவிஎம் ராஜன் ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் என பல நாயகர்களுடன் நடித்துள்ளார் சரோஜாதேவி
இக்கால நாயகர்களான விஜய்யின் ஒன்ஸ்மோர், சூர்யாவின் ஆதவன் ஆகிய திரைப்படங்களிலும் சரோஜாதேவி நடித்துள்ளார்
1967இல் ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தினார்.
இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா கேட்டுக் கொண்டதற்கு இணங்க 1970க்கு பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரோஜாதேவி.
எம்ஜிஆரின் நம்பிக்கை கூறிய நாயகியாக இருந்ததால் அவருக்கு அரசியல் வாய்ப்பு கைகூடி வந்ததாகவும், அதனை தான் மறுத்துவிட்டதாகவும் சரோஜாதேவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்
தனது மூத்த மகனுக்கு ராமச்சந்திரன் என்றும் இரண்டாவது மகளுக்கு இந்திரா என்றும் பெயர் சூட்டியிருந்த சரோஜாதேவி, தனது அக்காள் மகள் புவனேஸ்வரியை தத்தெடுத்து வளத்து வந்தார். புவனேஸ்வரி காலமானதால் அவரது பெயரில் தொடர்ந்து விருதுகள் வழங்கி வந்தார்
இந்நிலையில் பெங்களூருவில் மல்லேஸ்வரத்தில் வசித்து வந்த சரோஜாதேவி வயது மூப்பு காரணமாக தனது 87 வது வயதில் காலமானார்.
அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடலால் மறைந்தாலும் அவரது திரைப்படங்கள் மூலம் காலமெல்லாம் திரை ரசிகர்கள் மனதில் நிலைத்திருப்பார்.. அபிநய சரஸ்வதி..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu