ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ் மோசடி பிரதர்ஸை தட்டி தூக்கிய போலீசார்..! பணத்தை பறி கொடுத்தவர்கள் சாபம்
சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.மால் என்ற பெயரில் வணிக வளாகம் நடத்தி அதிகவட்டி தருவதாக முதலீட்டாளைகளை ஏமாற்றி கோடிகளை வாரிச்சுருட்டிய கோட் சூட் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். பணத்தை இழந்தவர்கள் சாபமிட்டு கண்ணீர் விட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
ரேமண்ட் மாடல் மாதிரி போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் பணத்தை வாரிச்சுருட்டிய வழக்கில் நீண்ட தேடுதலுக்கு பின் போலீசில் சிக்கி உள்ள மோசடி சகோதரர்கள் இவர்கள் தான்..!
சென்னை அண்ணா நகரை அடுத்துள்ள நொளம்பூரில் ‘ஏ.ஆர்.டி ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான ஆல்வின் மற்றும் ராபின் சகோதரர்கள், ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ் மோசடி நிறுவனங்களை போல ஏ.ஆர்.டி நிறுவனம் பெயரில் தங்க நகை சேமிப்பு, தங்க நகைக் கடன் மற்றும் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். வாடகைக் கட்டிடத்தில் ஏ.ஆர். மால் என்ற பெயரில் வணிக வளாகம் தொடங்கி தங்கள் பல கோடிகளுக்கு அதிபதி போல நம்ப வைத்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் லட்சம் லட்சமாக முதலீடுகளை பெற்றதாக கூறப்படுகின்றது
சில நாட்கள் வட்டியை வாரி வழங்கி முதலீட்டாளர்களை கவர்ந்த ராபின், ஆரோன் சகோதரர்கள் பின்னர் வட்டி தராமல் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு நிர்வாகிகளுடன் தலைமறைவாகினர். ஏமாந்த பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த சகோதரர்கள் இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ள பொருளாதார குற்றபிரிவு போலீசார், பங்குதாரரான பிரியா என்பவரை மட்டும் கைது செய்திருந்தனர். ஆரோன் மற்றும் ராபின் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து கொண்டு தங்களை சிலர் ஏமாற்றி விட்டது போல நாடகமாடி வீடியோ வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆரோன், ராபின் ஆகிய இருவரையும் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்கள் இருவரையும் ஏ.ஆர் மால் மற்றும் ஏஆர்டி ஜூவல்லரி கடை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து திரண்ட முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பை எல்லாம் ஏமாற்றி விழுங்கி மோசடி செய்து விட்டதாக கூறி சகோதர்களுக்கு சாபம் விட்டனர்.
அதில் காந்தாமணி என்ற பெண், தனது மகள் மகன் ஆகியோருக்கு சொந்தமான 25 சவரனுக்கு மேல் நகைகளை வாங்கி முதலீடு செய்திருந்ததாகவும், இந்த மோசடி நிறுவனத்தை நம்பி தானே தனது பிள்ளைகளை ஏமாற்றி விட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
பொது மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பணத்தை இவர்கள் எங்கே பதுக்கி வைத்துள்ளனர் எனவும், சொத்துக்களாக ஏதும் குவித்துள்ளனரா? அல்லது வெளிநாட்டில் ஏதேனும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா? எனவும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments