தாமிரபரணி தாயின் வரம் ஆத்தூர் வெற்றிலைக்கு கிடைத்தது புவிசார் குறியீடு..! காரமும் சுவையும் அள்ளுது

0 2141
தாமிரபரணி தாயின் வரம் ஆத்தூர் வெற்றிலைக்கு கிடைத்தது புவிசார் குறியீடு..! காரமும் சுவையும் அள்ளுது

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலைக்கு, புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அறுவடை செய்து 10 நாட்களானாலும் காரத்தன்மை மாறாமல் இருப்பதால், வடமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகும் ஆத்தூர் வெற்றிலையின் சிறப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

திருமணம், கோவில் திருவிழாக்கள் என எந்த ஒரு சுபகாரியத்தையும் வெற்றிலை பாக்குடன் ஆரம்பிப்பது தான் தமிழர்களின் பாரம்பரியம்.

மக்களகரமானது மட்டுமின்றி , ஜீரண சக்தியை கொடுக்கும் மருத்துவ குணமிக்க வெற்றிலை தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்.. தேனி மாவட்டம் சின்னமனூர், கூடலூர் காவேரிக்கரை, நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் , வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர், திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியிலும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மரந்தலை, வெள்ளக்கோவில், சுகந்தலை, மேல ஆத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் இந்த வெற்றிலை பயிரிடப்படுகிறது. மற்றப்பகுதிகளில் விளையும் வெற்றிலையை விட தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் விளையும் ஆத்தூர் வெற்றிலை கணிசமான காரத்தன்மையுடன், அதிக ஜீரண சக்தியுடன் விளங்குவதால் சிறப்பை பெற்றுள்ளது

பொதுவாக மற்ற ஊர்களில் அறுவடை செய்யப்படும் வெற்றிலை, கோடையில் மூன்று முதல் ஐந்து நாட்கள் மற்றும் குளிர்காலத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும். ஆனால் ஆத்தூர் வெற்றிலை எந்த காலநிலையிலும் ஏழு முதல் பத்து நாட்கள் வரை அதன் காரத்தன்மை மாறாமல் தரமாக இருக்கும். இதனால் ஆத்தூர் வெற்றிலை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்

இத்தனை சிறப்புகளை பெற்றிருப்பதால் ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு (GI) கிடைத்துள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். வெற்றிலை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கவும், காப்பீடு வசதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments