பத்தாம் வகுப்பு பையனுக்காக படிப்போடு, பெற்றோரையும் உதறிய கல்லூரி மாணவி..! லிட்டில் பிரின்ஸஸ் பாவங்கள்..!
தஞ்சாவூரில் தந்தை வாங்கிக் கொடுத்த செல்போனில்,இன்ஸ்டாகிராம் சாட்டிங்கில் மூழ்கிய பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த காதலனுக்காக, பெற்றோரையும், படிப்பையும் உதறிவிட்டுச்சென்ற நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.
காவல் நிலையத்தில் இருந்து கருப்பு சட்டை அணிந்த காதலனுடன் கைகோர்த்தபடி நடந்து வரும் இவர் தான் படிப்போடு, பெற்றோரையும் உதறிய தஞ்சாவூர் லிட்டில் பிரின்ஸஸ் மோகனப்பிரியா..!
தஞ்சாவூர் பொறியியல் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்த மோகனப்பிரியா செல்போனில் முப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் மூழ்கியதால், பெங்களூரை சேர்ந்த 22 வயது சுந்தர் என்பவர் அறிமுகமானார். இருவரது நட்பும் காதலான பின்னர் தான் தெரிந்தது. குடியாத்தத்தை சேர்ந்த சுந்தர் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பெங்களூரில் சமையல் வேலை பார்த்து வருவது.
காதலன் மேல் வைத்த கண்மூடித்தனமான அன்பால் கடந்த 15 ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய மோகனப்பிரியா காதலனை தேடி காட்பாடி சென்றார். இருவரும் அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்ற தங்கள் மகளை காணவில்லை என்று மோகனப்பிரியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையை முன்னெடுத்த போலீசார், செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். காதலனுடன், மோகனப்பிரியா தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அழைத்த போது மோகனப்பிரியா செல்ல மறுத்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து தனது மகளை கடத்தி வந்து விட்டதாக காதலன் சுந்தர் மீது குடியாத்தம் காவல் நிலையத்தில் மோகனப்பிரியாவின் பெற்றோர் மற்றொரு புகார் அளித்தனர். இதையடுத்து காதலனுடன் காவல் நிலையத்தில் ஆஜரான மோகனப்பிரியா, தான் மேஜர் என்பதால் காதலனுடன் தான் செல்வேன் என்றும், தன்னை செல்லமாக வளர்த்து, செல்போன் வாங்கிக் கொடுத்ததுடன், லட்சக்கணக்கில் பணம் கட்டி பொறியியல் படிக்கவைத்த பெற்றோரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் ஒரு மனுவை அளித்ததோடு, பெற்றோர் மற்றும் படிப்பை உதறிவிட்டு காதலனுடன் புறப்பட்டுச்சென்றார்.
தங்கள் மகளை காணாமல் பரிதவித்து, காவல் நிலையத்தில் காத்திருந்து, நடந்ததை எல்லாம் மறந்து மகள் தங்களுடன் வருவாள் என்று எண்ணியிருந்த மோகனப்பிரியாவின் பெற்றோரோ, கண்ணீருடன் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
Comments