முன்னால் சென்ற லாரி.. முந்த முயன்ற லோடு ஆட்டோ.. பரிதாபமாக பலியான இளைஞர்..!

0 31913
முன்னால் சென்ற லாரி.. முந்த முயன்ற லோடு ஆட்டோ.. பரிதாபமாக பலியான இளைஞர்..!

சேலம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற டாடா ஏஸ் வாகனம் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் பொறியியல் பட்டதாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

சேலம் M. பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கார்த்திக், கந்தம்பட்டி புறவழிச்சாலையில் இயங்கி வரும் திரிவேணி - நெக்சா கார் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டரில் பணியாற்றி வந்தார்.

நாள்தோறும் தனது புல்லட் வாகனத்தில் வேலைக்குச் செல்லும் கார்த்திக், செவ்வாய்கிழமை காலையும் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். உடையாப்பட்டி புறவழிச்சாலை அருகே மாசிநாயக்கன்பட்டி என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்று உள்ளது. அந்தப் பாலத்தின் மீது ஏறி இறங்கும்போது, எதிரே வந்த லாரியை முந்திக்கொண்டு டாடா ஏஸ் வாகனம் ஒன்று வந்ததாகக் கூறப்படுகிறது.

அதனை எதிர்பாராத கார்த்திக் மீது டாடா ஏஸ் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். தலைக்கவசம் அணிந்து சென்ற நிலையிலும் கார்த்திக்கின் இடுப்புப் பகுதியில் பலமான அடி பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என்கின்றனர் உறவினர்கள்.

அடிக்கடி விபத்துகள் நேரும் பகுதி என்பதால், பாலத்தின் இருமருங்கிலும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நடுவில் செண்டர் மீடியன் இல்லாத பாலம் என்பதால், பாலம் துவங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் 500 மீட்டர் தூரத்தில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் பேரிகார்டுகள் இருந்துள்ளன. ஆனால் அந்த பேரிகார்டுகள் முறையான பரமாரிப்பின்றி, சேதமடைந்து சாலையோரத்தில் கிடத்தப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

பாலத்தின் இறக்கத்தில் வாகனங்கள் கூடுதல் வேகத்தில் வரும் என்பதை உணராமல், டாடா ஏஸ் ஓட்டுநர், லாரியை முந்த முயன்றதே விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். அதேநேரம் பேரிகார்டுகளும் முறையாக வைக்கப்பட்டு இருந்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சின்னசேலத்தைச் சேர்ந்த டாடா ஏஸ் ஓட்டுநர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ள நிலையில்,அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் மாசிநாயக்கன்பட்டி பாலம் அருகே வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும்படியான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை விரைந்து எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments