புகழின் உச்சிக்குச் சென்றபோதும் பிறந்த ஊரை மறக்காத எஸ்.பி.பி... கண்ணீரில் மூழ்கிய கோனேட்டம்பேட்டை

0 7969
புகழின் உச்சிக்குச் சென்றபோதும் பிறந்த ஊரை மறக்காத எஸ்.பி.பி... கண்ணீரில் மூழ்கிய கோனேட்டம்பேட்டை

பிறந்த ஊரை மறக்காமல் தேவையான வசதிகள் செய்துகொடுத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவால் கோனேட்டம்பேட்டை ஊரே கண்கலங்கி நிற்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கோனேட்டம்பேட்டை என்ற ஊர்தான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தாயார் பிறந்த ஊர். இந்த ஊரில் தன் தாத்தா வீட்டில் எஸ்.பி.பி. பிறந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தந்தை எஸ்.பி.சாம்பமூர்த்தி ஹரிகதா கலைஞர் என்பதால் நாடகத்தில் நடிப்பதற்காக ஊர்ஊராகச் சென்றுகொண்டே இருந்ததால், தன் மனைவி கர்ப்பமானதையடுத்துக் கோனேட்டம்பேட்டையில் உள்ள அவரின் பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார்.

அப்போதுதான், எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்தார். 6 வயது வரை அந்த ஊரிலேயே வளர்ந்தார். திரையுலகில் வளர்ந்து பெரிய பாடகரான பிறகும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஊருக்குச் செல்வதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வழக்கமாகக் கொண்டிருந்தார். தாயின் ஊரும் தான் பிறந்த ஊருமான கோனேட்டம்பேட்டையில் பள்ளிகளைக் கட்டியுள்ளதோடு, கழிவறை உள்ளிட்ட சுகாதாரப்பணிகளையும் செய்துள்ளார்.

அந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அங்குள்ள கோவில், குளம், தான் சிறுவயதாக இருந்த போது விளையாடிய ஆலமரம் ஆகியவற்றைப் பார்த்துப் பழைய நினைவுகளில் மூழ்குவது எஸ்.பி.பி.யின் வழக்கம்.

ஊருக்கு வந்தால் தனது நண்பர்களை அழைத்துப் பேசுதுடன், அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும் செய்வார் என அவருக்கு நெருக்கமான நண்பரான ராஜேந்திர பிரசாத் என்பவர் சொல்கிறார். 2004ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத்தின் தந்தை இறந்த போது கோனேட்டம்பேட்டைக்குச் சென்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம் இறுதி மரியாதை செலுத்தினார்.

நெல்லூரில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன் தந்தைக்குச் சிலை அமைத்தார். அப்போது, கோனேட்டம்பேட்டை மக்களைத் தனி வாகனத்தில் நெல்லூருக்கு அழைத்துச் சென்று சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க வைத்து அன்பு காட்டினார். இந்த ஊரிலுள்ள சிறிய விநாயகர் கோவிலில்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பெற்றோர் திருமணம் நடைபெற்றது.

தற்போது வரை எஸ்.பி பாலசுப்ரமணியம் குடும்பத்தினர்தான் இந்தக் கோவிலைப் பராமரித்து வருகின்றனர். 2018ஆம் ஆண்டு எஸ்.பி.பி கடைசியாகக் கோனேட்டம்பேட்டைக்குச் சென்றார். அப்போது, ஊர்மக்களுக்காகக் குடிநீர்த் தொட்டி கட்டிக் கொடுத்தார் எஸ்.பி.பி.

வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் பிறந்த ஊரையும் வளர்ந்த ஊரையும் மறக்கக் கூடாது என்று அடிக்கடி எஸ்.பி.பி. சொல்வது உண்டு. சொன்னது போல வாழ்ந்தும் காட்டினார் பாடும் நிலா.

இப்போது, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவால் கலங்கி நிற்கிறது அவர் பிறந்த ஊரான கோனேட்டம்பேட்டை!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments