அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களாக மாறிய பட்டதாரி இளைஞர்கள்..! 3 மாதமாக உள்ளூரில் பாடம்

0 2609

தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களைக் கற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணாந்தூர் கிராமத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ளூர் பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து 3 மாதங்களாக மாதிரி பள்ளிக்கூடம் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு (இன்னும் சில வாரங்களில்) காலாண்டு தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், அரசு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் கல்வி பயிலும் வசதி இல்லாத ஏழை எளிய மாணவர்கள் பள்ளி திறக்கப்படும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அடுத்த பண்ணாந்தூர் கிராமத்தில் தனியார் பள்ளி மாணவர்களை போல தங்கள் ஊர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்த ஆண்டுக்கான கல்வி கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்ட உள்ளூர் பட்டதாரி இளைஞர்கள், தங்களே ஆசிரியர்களாக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா அச்சம் காரணமாக ஊரே முடங்கி கிடக்க அருகில் பயனற்று கிடந்த கட்டிடம் ஒன்றை சுத்தம் செய்து வர்ணம் பூசி பயன்பாட்டுக்கு உகந்த மினி பாடசாலையாக மாற்றிய இளைஞர்கள் தினமும் மாதிரி பள்ளிக்கூடத்தையே நடத்தி வருகின்றனர்.

தினமும் காலையில் தேசிய கொடியேற்றிவைத்து கொடி வணக்கம் முடிந்ததும் உலக அறிவை வளர்க்கும் விதமாக செய்தி தாள்களை வாசிக்கச்செய்து, அனைத்து மாணவர்களையும் அமர வைத்து பாடங்களை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் இளைஞர்களின் இந்த மகத்தான கல்வி சேவைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமல்ல கிராம மக்கள் அனைவரும் தேவையான உதவியை செய்து வருகின்றனர். தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளியில் பயிலும் இந்த ஊர் மாணவ மாணவிகளும் அனைத்து பாடங்களையும் கற்று வருகின்றனர்.

கொரோனா அச்சம் என்று இந்த ஊர் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கூடம் பக்கம் செல்லாவிட்டாலும் கல்வியின் மீது கொண்ட அக்கறையினால் தங்கள் இருப்பிடத்தையே பள்ளியாக மாற்றிய இளைஞர் சக்தியால், இங்குள்ள ஏழை மாணவ மாணவிகள் தினமும் பாடங்களை கற்று வருகின்றனர்.

பொது அறிவுக்கல்வி அனைவருக்கும் மொத்தமாக நடத்தப்பட்டாலும் மற்ற வகுப்புகள் மாணவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப தனித் தனியாக சொல்லிக் கொடுக்கப்படுவதால் மாணவ மாணவிகள் விரும்பி வந்து கல்வி கற்றுச் செல்கின்றனர்.

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பதற்கு இந்த இளம் விதைகள் ஒவ்வொன்றும் நிகழ்கால சாட்சிகள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments