பாகிஸ்தான், சீனா எல்லையைத் தொடர்ந்து நேபாள எல்லையிலும் பிரச்னை! பின்னணி என்ன?

0 25294

இதுவரை அமைதியாக இருந்த இந்திய - நேபாள எல்லையிலும் பிரச்னை ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு அரங்கேறியிருக்கிறது. இன்று மதியம் பீகார் மாநிலத்தில், நேபாள எல்லையை ஒட்டியுள்ள சிதாமர்ஹி எனும் இடத்தில், நேபாள பகுதியிலிருந்த நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியிருக்கிறார். இரண்டு பேர் படுகாயம் என்று உள்ளூர் மக்கள் புகார் அளித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

image

இந்தியாவின் அசைக்க முடியாத நட்பு நாடாக விளங்கிய நேபாளம் எப்போதிலிருந்து இந்தியாவுக்கு எதிராக திரும்பத் தொடங்கியது? நேபாளம் இந்தியாவை நேரடியாகப் பகைத்துக்கொண்டதன் காரணம் என்ன..?

இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடாக இந்த நேபாளம் தற்போது நேரடியாக இந்தியாவைப் பகைத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இந்தியப் பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் அளவுக்கு எல்லைப் பிரச்னை வெடித்திருக்கிறது.

சமீபத்தில் நேபாளத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியப் பகுதிகளில் உள்ள காலாபாணி, லிப்பியதூரா, லிப்போலெக் ஆகிய பகுதிகளைத் தம் வரைபடத்தில் சேர்த்திருக்கிறது. இந்த சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையும், பிரதிநிதிகள் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வார இறுதியில் நேபாள அதிபர் கையெழுத்திட்டபின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வரும். நேபாள அரசின் இந்தப் புதிய வரைபடத்துக்கு இந்திய அரசு எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதோடு மட்டுமல்லாமல் நிராகரிக்கவும் செய்தது.

image


நேபாள அரசு உரிமை கோரும் காலாபாணி, லிப்பியதூரா, லிப்போலெக் ஆகிய மூன்று பகுதிகளும் 60 ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. இப்போது, உத்தராகாண்ட் மாநில பித்தோர்கார் மாவட்டத்தில் உள்ள பகுதிகளாகும். அங்கு வசிக்கும் மக்களுக்கு இந்திய ஓட்டு அட்டைகள் கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று பகுதிகளும் ஒரு காலத்தில் நேபாள மன்னராட்சியின் கீழ் இருந்த பகுதிகளாகும். கிழக்கிந்திய கம்பெனிக்கும், நேபாள மன்னருக்கும் நடந்த போரில் நேபாளம் தோற்றது. இந்தப் போரின் முடிவில் நேபாளம் தனது ஆட்சிப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை இழந்தது. கார்வால், சிர்மூர், குமாவுன், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தது.

அதன் பிறகு 1816 - ம் ஆண்டு டிசம்பரில் கையெழுத்தான சுகௌலி உடன்படிக்கையில் காலாபாணி, லிப்போலெக் ஆகிய பகுதிகள் பிரச்னைக்கு உரிய இடங்களாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் சாரதா ஆறு உற்பத்தியாகும் பகுதி நேபாளத்தின் மேற்கு எல்லையாகக் கூறப்பட்டுள்ளது.

image

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலும் சரி, இந்திய ஆட்சியிலும் சரி இதுவரை நேபாளம் இந்த எல்லைப் பிரச்னையை எழுப்பவே இல்லை. ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட புதிய வரைபடத்தை இந்தியா வெளியிட்டது. அந்த வரைபடத்தில் காலாபாணி இந்திய எல்லைக்குள் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய நேபாளம் எதிர்ப்பைத் தெரிவித்தது. மேலும், சாரதா ஆறு உற்பத்தியாகும் இடம் தற்போதைய இந்திய வரைபடத்தில் உள்ளது என்ற நேபாளத்தின் கோரிக்கையை இந்தியா மறுத்து விட்டது.

நேபாளத்தின் உரிமை கோரலுக்கு இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் நரவணே, 'சீனாவின் தூண்டுதலின் பேரில் தான் நேபாளம் கண்டனம் தெரிவிக்கிறது' என்று எதிர்ப்பு தெரிவித்தார். இது நேபாளத்தை மேலும் சீண்டிப் பார்த்தது.

image

அதன்பிறகு, இப்போது திடீரென்று இந்தப் பிரச்னை ஏற்படக் காரணம், சீனாவில் உள்ள கைலாஷ் - மானசரோவர் பகுதிகளுக்குச் செல்ல லிபுலேக் கணவாய்க்கு காலாபாணி, குஞ்சி வழியாகச் சாலை அமைத்த இந்தியா திறந்து வைத்தது. புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு மட்டுமல்லாமல் ராணுவத் தளவாடங்களும் ஏற்றிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்த பிறகுதான் நேபாளம் எல்லைப் பிரச்னையை கிளற ஆரம்பித்திருக்கிறது...

கொரோனா பிரச்னையிலும் நேபாள பிரதமர்கெ.பி.ஷர்மா ஒலி , "சீனா, இத்தாலியிலிருந்து பரவும் கொரோனா வைரஸை விடவும் இந்திய கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது" என்று கூறியதிலிருந்தே நேபாளம் இந்தியாவை எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணரலாம்.

சிறிது சிறிதாக இந்தியா - நேபாளம் இடையே புகையத் தொடங்கிய பிரச்னை இப்போது துப்பாக்கிச்சூடு வரை வந்து நிற்கிறது. இரு நாடுகளும் ஒன்றையொன்று புறக்கணிக்க முடியாத படி நெருங்கிய தொடர்பைக் கொண்டது.

இந்தியாவைச் சுற்றியிருக்கும் அண்டை நாடுகள் அனைத்தையும் சீனா தன் ஆதிக்கத்துக்குக் கொண்டுவந்துவிட்டது. நேபாளத்தை இழந்துவிடாமல் அமைதியான முறையில் இந்த எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments