போராட்டம் ரஜினிக்கு எதிராகவா..? பெரியாருக்கு எதிராகவா.? குழம்பிய தொண்டர்கள்..!

0 2450

தேனியில் ரஜினிக்கு எதிராக போராட வந்த ஆதித்தமிழர் பேரவை அமைப்பை சேர்ந்த 7 பேர், போலீசாரை கண்ட பதற்றத்தில் பெரியாரைக் கண்டித்து கோஷமிட்ட நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த், பெரியாரை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி, தேனி பகுதி ஆதிதமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரஜினிக்கு எதிராக போராடப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி ரஜினியை கண்டித்து கோஷமிட்டபடியே ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 7 பேர் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்பதால் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீசாரை கண்ட பதற்றத்தில் வேகமாக கோஷமிட்ட ஆதிதமிழர் பேரவையை சேர்ந்த ஒருவர், தந்தை பெரியாரை இழிவுபடுத்திய பெரியாரை வன்மையாக கண்டிப்பதாக உரத்த குரலில் கோஷமிட, அதனை அப்படியே பின்பாட்டாக பாடினர் உடன் வந்த 6 போராளிகளும்..!

ஒரு முறை என்றால் பரவாயில்லை 2 வது தடவையும் பெரியாரை கண்டிப்பதாக கோஷமிட்ட போராளிகள் பின்னர் சுதாரித்துக் கொண்டு ரஜினியை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

முழுமையாக கோஷமிட்டு முடிப்பதற்குள்ளாகவே அந்த 7 பேரையும் கொத்தாக கைது செய்து மண்டபம் ஒன்றில் அடைத்தனர் காவல்துறையினர்.

எதற்காக போராடுகிறோம் ? யாரை எதிர்த்து போராடுகிறோம்? போராடுவதால் என்ன பயன் ? இப்படி எதையுமே அறிந்து கொள்ளாமல் கொடி பிடித்துக் கொண்டு, யாரோ ஒருவர் கூறியதை நம்பி, கூட்டத்தில் ஒருவர் சொல்வதை திரும்பச் சொல்லி நடத்தப்படும் இதுபோன்ற சம்பிரதாய போராட்டங்கள் அனைத்துமே தேவையில்லாத ஆணிகள் தான்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments