மறைமுக தேர்தலை அறிமுகப்படுத்தியதே தி.மு.க.தான்

0 609

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தலை அறிமுகப்படுத்தியதே திமுக ஆட்சிக்காலத்தில் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நெல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை நடைபெறும் புதிய மாவட்ட துவக்க விழாவிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் உதயகுமார்,கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், 2021 ம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி எந்த அடிப்படையில் கூறினார் என தெரியவில்லை என்றார். மேலும் 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என்பதையே ரஜினி அவ்வாறு கூறியிருக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமைத்த கூட்டணி தற்போதும் தொடர்வதாக கூறிய முதலமைச்சர், 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தெரிவித்தார். உள்ளாட்சியில் மறைமுக தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்தியது திமுக தான் என்றும், அதை ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து தன்னாட்சி அமைப்பான தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என்ற அவர், அந்தத் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறினார். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், அந்தப் பணிகள் முடிந்தவுடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments