ஒரு மாதத்திற்குப் பின் கரை திரும்பிய மீனவர்கள்

0 372

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து லட்சத்தீவு அருகே கல்பனி தீவில் கரை ஒதுங்கிய போது, படகு சேதமடைந்ததால் 30 நாட்கள் சிக்கி தவித்த கன்னியாகுமரி மீனவர்கள் நேற்று கரை திரும்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 45 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து 5 படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அரபிக் கடலில் சூறாவளி காற்று, கியார் புயல் ஏற்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே கரை ஒதுங்கினர்.

இதில் கன்னியாகுமரியை சேர்ந்த 10 மீனவர்களின் படகு லட்சத் தீவு அருகே கல்பனி தீவில் கரை ஒதுங்கிய போது சேதமடைந்தது. இதையடுத்து, படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சேதமடைந்த படகுடன் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 130 கடல்மைல் தொலைவில் வந்தபோது பழுதடைந்த படகு தண்ணீரில் மூழ்கியது.

உயிர் தப்பி வந்த மீனவர்களை அவர்களுடைய உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். படகை வாடகைக்கு அமர்த்தி வந்ததால் தாங்கள் உயிர்தப்பியதாகவும், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகு மூழ்கிவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

 

வட்டிக்கு கடன் வாங்கி படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments