கடன் கொடுப்பது போல நடித்து கொள்ளை..!

0 259

கோவை மாவட்டத்தில் இரண்டு பேரை கத்தியால் குத்தி பணம் பறித்த வழக்கில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

50 லட்சம் ரூபாய் கடன் கொடுப்பது போல நடித்து, இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த நிதி நிறுவன அதிபரின் கபட நாடகம் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி கணியூர் சுங்கசாவடி அருகே திங்கள்கிழமை இரவு இரு சக்கரவாகனத்தில் வந்த இருவர் மீது, அந்த வழியாக வந்த புல்லட் மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு இரு சக்கரவாகனங்களில் வந்தவர்கள், காயமடைந்து கிடந்தவர்களை, கத்தியால் குத்தி அவர்களிடம் இருந்த பணப்பையை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பணத்தை பறி கொடுத்தவர்கள் கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தை சேரந்த தர்ஷனும், அவரது நண்பரான கோவை சுங்கத்தைச் சேர்ந்த ராகுல் என்பதும் தெரியவந்தது.

இவர்களில் தர்ஷன் குறும்படங்களும், விளம்பர படங்களும் எடுத்து வருகிறார். வெப் டிசைனிங் செய்து வரும் ராகுலுடன் இணைந்து கோவை சாய்பாபா காலனியில் தர்ஷன் தொழில் நடத்தி வருகிறார்.

தொழிலை விரிவு படுத்த எண்ணிய தர்ஷன், இளையான்குடியைச் சேர்ந்தவரும், திருப்பூரில் வசிப்பவருமான பிரபாகரன் என்ற நிதி நிறுவன அதிபரை அணுகினார். கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் சந்தித்து, பிரபாகரனிடம் 50 லட்ச ரூபாய் கடன் கேட்டனர்.

அப்போது,சினிமா படத்தயாரிப்பிற்கு வட்டிக்கு கடன் கொடுத்து வருவதாக பிரபாகரன் கூறியதை நம்பிய தர்ஷன், ஏற்கனவே சினிமா ஆசையில் இருந்ததால் எளிதாக பிரபாகரன் விரித்த வலையில் விழுந்தார்.

50 லட்ச ரூபாய் கடனுக்கு, செயல் கட்டணமாக இரண்டரை லட்சம் ரூபாய் தருமாறு தர்ஷனிடம், பிரபாகரன் கேட்டுள்ளார். இதையடுத்து தனது வீட்டு பத்திரத்தை வேறு ஒருவரிடம் அடமானம் வைத்து இரண்டரை லட்சம் ரூபாய் பெற்ற தர்ஷன், பணத்தை பிரபாகரனிடம் கொடுத்தார். இதன் பின் தர்சன் மற்றும் ராகுலிடம் பிரபாகரன் கொடுத்த 30லட்ச ரூபாய்கான காசோலை, வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது.

இதுகுறித்து இருவரும் முறையிட்டதை அடுத்து, பணமாகவே 50 லட்ச ரூபாய் தருவதாகவும், அதனை பத்து ஆண்டுகளில் திருப்பி தருமாறும் பிரபாகரன் கூறினார். இதனை நம்பி தர்ஷனும், ராகுலும் பல நாட்கள் பிரபாகரனிடம் பணத்திற்காக நடையாக நடந்தனர்.

அவர்களை பல நாட்களாக அலைய விட்ட பிரபாகரன் கடந்த திங்கட்கிழமை அன்று திருப்பூருக்கு, வந்து பணத்தை வாங்கி கொள்ளுமாறு கூறினார். இதனால் இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு சென்ற தர்ஷன் மற்றும் ராகுலிடம் பூட்டப்பட்ட தோல் பை ஒன்றை பிரபாகரன் கொடுத்தார். அந்த பைக்குள் முப்பது லட்ச ரூபாய் இருப்பதாகவும், 20 லட்ச ரூபாய்க்கு இரு காசோலைகள் இருப்பதாக கூறினார்.

அந்த பையை எடுத்துச் செல்லுமாறும், தனது உதவியாளர்கள் சாவியுடன் வந்து, அந்த பையை திறந்து தருவார்கள் என்றும் பிரபாகரன் கூறினார். இதனை உண்மை என்று நம்பிய இருவரும் பையை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். கருமத்தம்பட்டி சோதனை சாவடி அருகே அவர்கள் சென்ற போது, பின்னால் வந்த புல்லட் மோட்டார் சைக்கிள் தர்ஷன், ராகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இருவரும் கீழே விழுந்த நிலையில் மேலும் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 நான்கு பேர், தர்சனிடம் இருந்த பையை பறிக்க முயன்றனர். ஆனால் தர்சனும், ராகுலும் பணப்பையை காப்பாற்ற போராடிய போது, அந்த கும்பல் கத்தியால் குத்தி விட்டு பையை பறித்துச் சென்றது.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தமிழக மேற்கு மண்டல காவல்துறைத்தலைவர் பெரியய்யா உத்தரவின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நிதி நிறுவன அதிபர் பிரபாகரன் தான், இந்த வழிப்பறிக்கு காரணம் என்பது தெரியவந்தது.

இளைஞர்கள் இருவரையும் ஏமாற்றி இரண்டரை லட்ச ரூபாய் பறித்த பிரபாகரன் கடனாக பணத்தை கொடுப்பது போல் நடித்து, பின்னர் அதனை ஆட்களை ஏவி பறித்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து பிரபாகரன் மற்றும் அவருடன் கூட்டாக செயல்பட்ட பத்து பேரை போலீசார் பிடித்து உள்ளனர். மேலும் தர்ஷனின் மோட்டார் சைக்கிளில் புல்லட் மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய கேரளாவைச் சேர்ந்த தமிழரசன், திருப்பூரைச் சேர்ந்த சிவராஜையும் பிடித்துள்ள போலீசார், அந்த இருவருக்கும் வழிப்பறியில் தொடர்பு உள்ளதாக என்றும் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments