ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

0 326

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் கடந்த ஆண்டை விட 91 சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட வாரியாக பதிவான விபத்து விவரம் குறித்தும், ஹெல்மெட் அணியாததால் பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரிவின் உதவி ஐ. ஜி சாம்சன் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாததற்காக 22 லட்சத்து 65 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டதாகவும், ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி 43 லட்சத்து 31 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 91 சதவீதம் அதிகம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, ஹெல்மெட் அணிந்து விபத்தில் சிக்கி 222 பேர் பலியானதாகவும், ஹெல்மெட் அணியாமல் 4,337 பேர் விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம், ஹெல்மெட் அணிந்து 289 உயிரிழந்திருப்பதாகவும், ஹெல்மெட் அணியாமல் விபத்தில் 3,376 பேர் பலியாகி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகன விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 4,457 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை 3,677 ஆக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் வாகன விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தும் வகையில், தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 8,477 காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பனை வெளியிடப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி எழுத்து தேர்வுகள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்து நடைமுறையும் முடிந்த பின்னர் நடப்பாண்டே 969 உதவி ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தாக்கலுக்கு பின் பேசிய நீதிபதிகள், இரு சக்கர வாகன ஓட்டிகளை விட அந்த வாகனத்தில் இருக்கும் பெட்ரோல் டேங்குகள்தான் அதிகம் ஹெல்மெட் அணிவதாக கருத்து தெரிவித்தனர்.

வட சென்னை ஜிஏ சாலை, பிராட்வே, பேசின் பிரிட்ஜ் சாலை போன்ற இடங்களில் ஹெல்மெட் சோதனை முறையாக நடைபெறுகிறதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஹெல்மெட் வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் பேசுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பார்த்துகொள்வார்களா எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உணவு பொருட்கள் டெலிவரி செய்யும் பணியாளர்களும் ஹெல்மெட் அணியாமல், சாலையில் தவறான பாதையில் செல்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

ஹெல்மெட் சோதனையை தொடர்ந்து நடத்துமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments