சென்னையில் விடிய விடிய கனமழை..!

0 1338

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, திருவள்ளூர் முதல் நாகை வரையிலான வட மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலையிலும் நீடித்தது.

தாம்பரம், பல்லாவரம், சேலையூர் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. காலையில் வேலைக்கு செல்பவர்களும், வியாபாரிகளும் மழையில் நனைந்தவாறே சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது. இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலங்கானா வரை நீண்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த சுழற்சி காரணமாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். திருவள்ளூரில் இருந்து நாகை வரையுள்ள வடமாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடலில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. 

சென்னையில் பெய்த கனமழை காரணமாக இடி தாக்கியதில் சுவர் விழுந்து, பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில் வசித்து வருபவர் செரினா, 42 வயதான இவரது கணவர் நவாஸ்கான், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து செரினா தனது 23 வயதான மகள் நஸ்ரின் பாத்திமா மற்றும் 14 வயதான லெனினுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வரும் செரினா, நேற்று வேலை முடித்துவிட்டு வீடுதிரும்பி தனது குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் பலத்த இடி தாக்கியதில் செரினாவின் வீட்டு ஓடுகள் சரிய தொடங்கியிருக்கிறது.

சத்தம் கேட்ட, செரினாவின் மகன், மகள் மற்றும் தாயார் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்துள்ளனர். செரினா சுதாரித்து வெளியே வருவதற்குள் ஓடுகள் மொத்தமும் சரிந்து, சுவர் இடிந்துள்ளது. இதில் சிக்கிய செரினா, மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் செரினாவை சடலமாக மீட்டனர். தகவல் அளித்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், செரினாவின் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments