ரபேல் போர் விமான பாகங்களை இணைக்க கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

0 442

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஐ.டி.ஐ. மாணவர்கள் ரபேல் போர் விமான பாகங்களை இணைப்பது குறித்து நேரடியாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தின் நாக்பூரில் உள்ள ஐ.டி.ஐ. கல்வி நிறுவனமும், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனமும் இதற்காக ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.டி.ஐ முதல்வர் ஹேமந்த் அவாரே, டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து நாக்பூரில் சர்வதேச சரக்கு மற்றும் விமான முனையத்தை நிர்வாகித்து வருகின்றன என்றார். பயணிகள் விமானமான பால்கன் 2000 மற்றும் ரபேல் போர் விமானங்களை கட்டமைக்கும் பணி இங்கு நடைபெற்று வருவதாக கூறிய அவர், அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடனான கலந்துரையாடலின் போது, புதிய பட்டப்படிப்பை தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

இதன் படி விமான கட்டமைப்பு மற்றும் கருவிகள் பொருத்துதல் என்ற இரண்டாண்டு பட்டப்படிப்பை தொடங்குவது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறிய அவர், இதற்கு அரசு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது என்றார். நடப்பு கல்வி ஆண்டு முதல் பட்டப்படிப்பு தொடங்கும் நிலையில் 21 மாணவர்களை கொண்ட இரு பிரிவுகள் தொடங்கப்படும் என்ற அவர், இதில் சேரும் மாணவர்கள், பால்கன் மற்றும் ரபேல் விமான பாகங்கள் குறித்து படிப்பதோடு, விமானி அறை பாகங்களை ஒருங்கிணைப்பது, இறக்கைகளை பொருத்துவது, விமான பாகங்களை பொருத்துவது குறித்தும் படிக்க உள்ளனர் என்றார். அடுத்த கல்வி ஆண்டில் 21 மாணவர்களை கொண்ட ஒரு பிரிவும், 2021-22 ஆண்டில் 21 மாணவர்களை கொண்ட இரு பிரிவுகளும் தொடங்கப்படும் என்று ஹேமந்த் அவாரே தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments