ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்

0 193

ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் வேல்முருகன், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். செம்மரக் கடத்தலில் முக்கியப் புள்ளியாக திகழ்ந்த வேல்முருகன் குறித்த பல திடுக்கிடும் தகவல்களை போலீசார் கூறியுள்ளனர்.

சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட்டில் ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட போது, 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். முக்கிய ரவுடியான பினு நேற்று போலீசில் சரண் அடைந்தார். லாரி ஷெட்டின் உரிமையாளரான வேலு என்கிற வேல்முருகனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் அவர் இன்று சரண் அடைந்தார். லாரி ஷெட் உரிமையாளர் வேலு தொடர்பாக போலீசார் திரட்டியுள்ள தகவல்கள் திடுக்கிடச் செய்யும் வகையில் உள்ளன.

சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த வேலு என்கிற வேல் முருகனுக்கு ஆந்திர மாநில பகுதிகளிலிருந்து செம்மரங்களை கடத்துவது தான் முக்கிய தொழில் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்டச் சாலைக்கு அருகே மலையம்பாக்கம் பகுதியில் தேவராஜ் என்பவரிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் மாத வாடகைக்கு இடத்தைப் பெற்று லாரி ஷெட் அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. லாரி ஷெட்டாக இருந்தாலும், பெயருக்கு 2 லாரிகளை நிறுத்தி வைத்து விட்டு, செம்மரக்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்துவது தற்போது தெரியவந்துள்ளது.

வாகனங்களை திருடி கொண்டு வந்து மெக்கானிக் ஷெட்டில் வைத்து என்ஜின், சேஸ் நம்பரை மாற்றி செம்மரக் கட்டை கடத்தலுக்கு பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலு மீது குஜராத், ஆந்திரா, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செம்மரக் கடத்தல் தொடர்பாக வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது. செம்மரக்கட்டைகள் கடத்துவதற்கு ஓட்டுனர்களாக வந்த சில ரவுடிகள் மூலம் பினுவின் தொடர்பு கிடைத்துள்ளது. செம்மரக் கடத்தல் மூலம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிய வேலு, தனது தொழில் பாதுகாப்புக்காக பினு உள்ளிட்ட ரவுடிகளுக்கு செலவு செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. செம்மரக்கடத்தலில் மிகப்பெரிய புள்ளியாக வேல்முருகன் திகழ்வதால், அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments