தீவிரவாதத்திற்கு எதிராகவும் காஷ்மீருக்காகவும் போராடுகிறோமே தவிர, காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி

0 653

பயங்கரவாத த்தை எப்படி ஒடுக்குவது என்பதை மத்திய அரசுக்கு தெரியும் என்றும், பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் மத்திய அரசு இனியும் அமைதியாக இருக்காது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராகவுமே மத்திய அரசு போராடுகிறது என்றார். காஷ்மீரின் நலனுக்காகவே அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர், காஷ்மீரத்திற்கு எதிராகவோ, காஷ்மீரிகளுக்கு எதிராகவோ சண்டையிடவில்லை என்றார்.

காஷ்மீரை சேர்ந்த சகோதரிகளும், சகோதரர்களும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என்று அவர் கூறினார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மோடி, அது போன்ற சம்பவங்கள் நாட்டில் நடைபெற கூடாது என்றார்.

காஷ்மீரை சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாட்டின் பக்கம் இருப்பதாக பிரதமர் கூறினார். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை எவ்வாறு அழிப்பது என்பது அரசுக்கு தெரியும் என்ற மோடி, இந்த விவகாரத்தில் இனியும் அமைதியாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற போது, வறுமை, கல்வியறிவின்மையை அகற்றவதில் இரு நாடுகளும் இணைந்து பாடுபடலாம் என தாம் கூறியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அப்போது சொன்னதை செய்வேன் என்று இம்ரான்கான், அந்த வார்த்தையை நிறைவேற்றுகிறாரா என்பதை சோதித்து அறியும் நேரம் இது என்றார். புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த 100 மணி நேரத்திற்குள் அதற்கு காரணமான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் அழித்தது பெருமை அளிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

முன்னதாக டெல்லியில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் 185 நாடுகளின் பிரதிநிதிகளை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க ஆட்சியால் பொருளாதார ரீதியாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெள்ளத்தெளிவாக தென்படுகிறது என்றார். அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 10 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மோடி குறிப்பிட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments