மீண்டும் சிக்கலில் மகாலட்சுமியின் கணவர்..! மோசடி புகாரில் கைதான ரவீந்தர் சந்திரசேகர்..!

0 2564

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமான ரவீந்தர் சந்திரசேகர், ஃபேட்மேன் என்ற பெயரில் யூ-டியூபில் சினிமா விமர்சகராகவும் இருந்து வருகிறார்.

லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னன்னு தெரியுமா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் ரவீந்தர் சந்திரசேகர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2020-ஆம் ஆண்டு ரவீந்தர் சந்திரசேகர் தனக்கு அறிமுகமானபோது நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்தத் திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும் அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளை கூறியதாக தெரிவித்துள்ளார்.

தன்னை நம்பு வைப்பதற்காக திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் என்ற பெயரில் புனையப்பட்ட ஆவணங்களை காண்பித்ததாகவும், அதன் பேரில் 16 கோடி ரூபாய் முதலீடு செய்ய வைத்ததாக பாலாஜி தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய குற்ற பிரிவின் ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பாலாஜியின் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக கொடுத்த புகாரில் தன்னிடம் 20 லட்சம் வாங்கிக் கொண்டு ரவீந்தர் சந்திரசேகர் மோசடி செய்து விட்டார் என குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பான வழக்கும் விசாரணையில் இருந்து வரும் நிலையில், மற்றொரு வழக்கில் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments