சுற்றுச்சூழலின் பெயரால் திட்டங்கள் முடங்கக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தல்

0 2513

எளிதாக தொழில் தொடங்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கொண்டு வரப்படும் திட்டங்கள், சுற்றுச்சூழலின் பெயரால் தேவையில்லாமல் முடங்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

குஜராத்தின் ஏக்தா நகரில் அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

 இன்றும் நாளையும் நடைபெறும் இம்மாநாட்டில், மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து, காலநிலை மாற்றம், விலங்குகள், வனப்பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கின்றன.

மாநாட்டில் உரையாற்றிய அவர், நகர்ப்புற நக்சல்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும், குஜராத்தின் நர்மதா ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்டும் பணியை அரசியல் ஆதரவுடன் நகர்ப்புற நக்சல்கள் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் பல ஆண்டுகளாக முடக்கி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், பழைய வாகனங்களை ஒழிக்கும் கொள்கையை அமல்படுத்துவது, உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், சுற்றுச்சூழலை மேம்படுத்த மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மற்றும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என கூறினார்.

நாட்டில் வனப்பரப்பும், ஈரநிலங்களும் வேகமாக விரிவடைந்து வருவதாகவும், வனங்கள் தீயினால் அழிவதை தடுக்கும் நோக்கில், ஒவ்வொரு மாநிலத்திலும் வனத் தீயை அணைக்கும் நடைமுறைகள் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

திட்டங்களுக்கு எவ்வளவு வேகமாக சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படுமோ, அவ்வளவு வேகமாக வளர்ச்சியும் நடைபெறும் என்றும், 8 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க 600 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், இன்று 75 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments