பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

0 7343
பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

துபாயில் தவித்த கடலூர் இளைஞரை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது போல நாடகமாடிய கும்பல் ஒன்று அவருக்கு தெரியாமல் சாக்லேட் பெட்டிக்குள் தங்க கட்டிகளை மறைத்து கொடுத்தனுப்பிய நிலையில், தங்கத்துடன் தலைமறைவான உஷார் குருவியை கார் போட்டு தேடிய கடத்தல் கும்பல் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெட்டி கிடைத்த நிலையில் தங்க கட்டிகள் மாயமான சம்பவத்தின் கண்ணாமூச்சி ஆட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த தே.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா. இவர் கடந்த ஆண்டு துபாய்க்கு ஓட்டுனர் வேலைக்கு சென்றார். இவரை வேலைக்கு அனுப்பிவைத்த ஏஜெண்டு ஏமாற்றிய நிலையில், கட்டிட வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அப்போது அங்குள்ள நிறுவனம் ஒன்று பாலையாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டதால் செய்வதரியாது திகைத்த பாலையாவை அனுகிய சிலர் நாங்கள் பாஸ்போர்ட் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கிறோம் கவலை பட வேண்டாம் என்று கூறி உள்ளனர்.

சொன்னபடியே சம்பவத்தன்று பாலையாவுக்கு பாஸ்போர்ட்டுடன் டிக்கெட் வரை எடுத்து கொடுத்து பத்திரமாக சென்று வர வழி அனுப்பி வைத்தவர்களில் ஒருவர், சாக்லேட்டுகள் இருப்பதாக கூறி பெட்டி ஒன்றை தனது உறவினரிடம் கொடுத்து விடும் படி கூறி உள்ளார். பாலையாவும் அதனை வாங்கிக் வைத்துக் கொண்டு , கடந்த 14 ந்தேதி திருச்சி விமான நிலையம் வந்திறங்கி உள்ளார். விமான நிலையத்தில் சுதந்திர தின பாதுகாப்புக்காக சோதனை பலமாக இருந்ததால், பெட்டியை வாங்கவரவேண்டிய நபர்கள் யாரும் அங்கு வரவில்லை.

இதையடுத்து தன்னிடம் கொடுத்தனுப்பபட்ட சாக்லேட் பெட்டியை ரெஸ்ட்ரூமில் வைத்து திறந்து பார்த்துள்ளார், அதில் 3 தங்க கட்டிகள் இருந்துள்ளது. சிக்கினால் சிறை தான் என்பதை உணர்ந்த பாலைய்யா சாமர்த்தியமாக அந்த பெட்டியை சுங்கத்துறையின் கண்களில் படாமல் வெளியே கொண்டு வந்து கால் டாக்ஸி ஒன்றில் ஏறி தனது வீட்டுக்கு செல்லாமல் தனது மாமானார் ஊரான பேரலையூர் சென்று அவரிடம் தங்க கட்டிகள் உள்ள பெட்டியை ஒப்படைத்து விட்டு தலைமறைவானார்.

இதற்கு ஏற்றார் போல பாலைய்யாவின் மனைவி துபாயில் இருந்து ஊருக்கு திரும்பிய தனது கணவனை காணவில்லை என்று திட்டக்குடி போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே தங்க கட்டிகளுடன் திடீர் குருவியாக விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட பாலைய்யாவை தேடி ராமநாதபுரத்தை சேர்ந்த 9 பேர் கொண்ட தங்க கடத்தல் கும்பல் காரில் பாலைய்யாவின் வீட்டுக்கு சென்றது, அங்கு அவரது மனைவி தனது கணவரை காணவில்லை என்று கதறி அழுது ஒப்பாரி வைத்த நிலையில், விமான நிலையம் சென்று விசாரித்தனர். அங்கிருந்து பாலைய்யாவை ஏற்றிச் சென்ற கால்டாக்ஸி ஓட்டுனர் கொடுத்த தகவலின் பேரில் பேரலையூரில் உள்ள பாலையாவின் மாமனார் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு பாலையாவின் வீட்டிற்கு சென்று தங்கக் கட்டி இருந்த பெட்டியை எங்கே எனக்கேட்டு பஞ்சாயத்தை கூட்டினர்.

அந்த ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், பெட்டி தனது வீட்டில் உள்ளதாக ஒப்புக் கொண்ட பாலையாவின் மாமனாருடன் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் சென்றனர். அவரது வீட்டில் இருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு 4 பேரும் அப்படியே தப்பிச்சென்ற நிலையில் பஞ்சாயத்தில் காத்திருந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த 5 பேருடன் சேர்ந்து தங்ககட்டியை கடத்தி வந்த பாலையாவையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே திட்டக்குடியில் சாலை ஓரத்தில் கிடந்த மர்ம பெட்டியால் வெடிகுண்டு பீதி கிளம்பியது. வெடிகுண்டு நிபுணர்களின் துணையுடன் அதனை கைப்பற்றிய போலீசார், திறந்து பார்த்த போது அதில் பாரின் சாக்லேட்டுக்கள் மட்டும் இருந்தன.

தங்ககட்டியை எடுத்துக் கொண்டு 4 பேர் கும்பல் பெட்டியை வீசிச்சென்று இருக்கலாம் என்று தெரிவித்த போலீசார் திருச்சியை சேர்ந்த இப்ராகிம், சாகீர், உசைன், ஜெகன் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். தங்கத்தை கடத்தி வர திடீர் ஊர்க்குருவியான பாலைய்யா தங்க கட்டிகளுக்கு ஆசைப்பட்டதால் கள்ள பருந்தாகி போலீசில் சிக்கி கம்பி எண்ணி வருகின்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments