தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் - முதலமைச்சர்

0 6335
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில், தமிழகத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற முதலமைச்சர், 91.5சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 74.75சதவீதம் பேருக்கு 2ஆவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என்றார்.

தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசிபோடுவதை உறுதி செய்வது பெரிய சவாலாக இருப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஒரு வாரத்தில் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்திருப்பதால், மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments