கும்பகோணத்தில் குடிசை தொழில் போல வீட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பு... திருப்பூரில் புழக்கத்தில் விட்டவர் கைது!

0 46268
கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள்

கும்பகோணத்தில் வீட்டில் வைத்து குடிசை தொழில் போல கள்ளநோட்டுகளை அச்சடித்து திருப்பூரில் புழக்கத்தில் விட முயன்றவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள படியூர் சோதனை சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். திருப்பூரை நோக்கி ஒருவர் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சைகை காட்டினர். ஆனால், மோட்டார் சைக்கிளை அவர் நிறுத்தவில்லை. போலீசார் அந்த ஆசாமியை பின்னாலேயே விரட்டிச்சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக அவர் பதிலளித்தார்.மேலும் மோட்டார் சைக்கிளுக்கான ஆர்.சி. புத்தகமும் அவரிடத்தில் இல்லை.

சந்தேகமடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் பையை சோதனை செய்துள்ளனர். பையில் 2000 , 500 , 200 , 100 ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு பையை சோதனை செய்த போது ஏ- 4 தாளில் 2000 ரூபாய் நோட்டுகள் கலர்ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு கட் செய்யப்படாமல் இருந்தன. அப்போதுதான் அவன் வைத்திருந்த பணம் அனைத்தும் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. அச்சு அசல் நல்ல நோட்டுகள் போலவே கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள் இருந்தன.

இதையடுத்து, போலீசார் பிடிபட்டவனிடத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவன் பெயர் கண்ணன் என்றும் கும்பகோணம் தாலுகா கள்ளுக்கடை சந்து பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. மேலும், கள்ள நோட்டுகளை திருப்பூரில் புழக்கத்தில் விட கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கண்ணனை கைது செய்த போலீசார், 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 39ம், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 83-, 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 32 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 31 என மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, கும்பகோணத்திலுள்ள கண்ணனின் வீட்டுக்கு சென்று, சோதனை செய்தனர். வீட்டிலிருந்து ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் எடுக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் எந்திரம் மற்றும் மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட நிலையில் கட் செய்யாமல் வைத்திருந்த பல தாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், காங்கேயம் நீதிமன்றத்தில் கண்ணனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments