வாகனம் பிடிபட்டால் ஐயாயிரம்தான் அபராதம்... தமிழகத்தை அசால்ட்டாக குப்பைத் தொட்டியாக்கும் கேரளக்காரர்கள்!

0 12594
ராதாபுரம் பகுதியில் நிறுத்தியிருக்கும் கழிவு வண்டி

கேரளாவிலிருந்து கோழி கழிவுகள், மாட்டு இறைச்சிக் கழிவுகள் ஆகியவற்றை சாக்கு மூட்டைகளில் கட்டி, மீன் கொண்டுவருவதைப் போல வண்டிகளில் ஏற்றிவந்து தமிழகப் பகுதிகளில் கொட்டப்படுவதால், நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் வசிப்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவில் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கேரளாவின் குப்பைத் தொட்டியாக ராதாபுரம் பகுதி மாறுவதைத் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, கேரளா பதிவு எண் கொண்ட மீன் ஏற்றி செல்லும் லாரியில் சுமார் 3 டன் அளவிலான கோழி மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டது. அந்த வாகனம், செட்டிகுளம் விலக்கு அருகே வரும் போது வாகனத்தின் பின்பகுதி உடைந்ததால் அதிலிருந்த கழிவுகள் சாலையில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் கடுமையாகத் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அந்த வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாததால் வாகனத்தின் ஓட்டுநர், வாகனத்தை அங்கே நிறுத்தினார். கழிவுகள் ஏற்றி வந்த தகவல் அறிந்து அங்கு வந்த லெவிஞ்சிபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வாகனத்திற்கு ரூபாய் 5000 மட்டுமே அபராதம் விதித்தனர். சுகாதாரத் துறையினரோ காவல் துறையினரோ வழக்குப் பதிவு எதுவும் செய்யவில்லை.

கடந்த ஆண்டு, இதே போல கேரளாவிலிருந்து கழிவுகளை ஏற்றிவந்த 2 வாகனங்களைக் கூடங்குளம் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் இரண்டுக்கும் சுகாதாரத்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இருப்பினும், அந்த வாகனத்தின் உரிமையாளர் ஒரு லட்ச ரூபாய் கட்ட முடியாது எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் ரூபாய் 10,000 குறைக்கப்பட்டு அந்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. இதனால் காவல் துறையினரும், சுகாதாரத்துறையினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படும் கழிவுகளைத் தடுப்பதற்குத் தமிழகத்தில் கடுமையான சட்டம் எதுவும் இல்லை, அபராதம் மட்டுமே விதிக்க முடியும். ஆகையால், சுதந்திரமாகப் பயமின்றி இறைச்சிக் கழிவுகளை கேரளாவில் இருந்து, ராதாபுரம் பகுதிகளுக்குக் கொண்டு வந்து கேரள வாகன ஓட்டிகள் கொட்டிவிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட இருக்கன்துறை, செட்டிகுளம், நக்கனேரி, கூடங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் தினமும் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் மோசமாகத் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள், “கழிவுகளை ஏற்றிவரும் வாகனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த சிறிய அபராதத் தொகையைக் கட்டிவிட்டு, கழிவுகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அப்படியே கொட்டிவிட்டு வாகனத்தை மட்டும் எடுத்துச் சென்றுவிடுகின்றனர். இதனால், ராதாபுரம் பகுதியில் ஆங்காங்கே துர்நாற்றம் வீசுகிறது. கொடிய நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments