பத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி ஷீட்டல் ஆம்தே தற்கொலை.

பத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி ஷீட்டல் ஆம்தே தற்கொலை செய்து கொண்டார்.
மராட்டிய மாநிலம் சந்திராப்பூரில் தொழு நோயாளிகளுக்காக மகாரோகி சேவா சமிதி என்ற அறக்கட்டளையை தொடங்கி சமூக சேவையில் ஈடுபட்டு வந்தவர் பாபா ஆம்தே. இவர் தன் சமூக சேவைகளுக்காக பத்மவிபூஷன் விருது பெற்றவர். கடந்த 2008-ம் ஆண்டு இவர் உயிரிழந்தார். தற்போது மகாரோகி சேவா சமிதியை அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
சமீபத்தில் பாபா ஆம்தேவின் பேத்தி ஷீட்டல் ஆம்தே மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஷீட்டல் ஆம்தே, மகாரோகி சேவா சமிதி நிர்வாகம் குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதையடுத்து பாபா ஆம்தேவின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் ஷீட்டல் ஆம்தே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று சந்திராப்பூர் வரோரா, ஆனந்தவன் ஆசிரமத்தில் ஷீட்டல் ஆம்தே பிணமாக மீட்கப்பட்டார். அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து மேலும் தகவலை கூற போலீசார் மறுத்துவிட்டனர். தடயவியல் நிபுணர்கள் நாக்பூரில் இருந்து வரோரா சென்று உள்ளனர்.ஷீட்டல் ஆம்தே பிணமாக மீட்கப்பட்ட அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments