வெள்ளத்தில் மிதக்கும் முடிச்சூர்..!

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக முடங்கிய பகுதி முடிச்சூர்... தற்போது பெய்த கனமழை மற்றும் ஏரிகள் நிரம்பி வெளியேறிய நீரால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மீண்டும் அதே போன்று மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் வரதராஜபுரம், ராயப்பன் நகர் பகுதியில் ஓரத்தூர் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் மற்றும் மழை நீர் சேர்ந்து சாலைகளில் ஆறுபோல் ஓடுகிறது. இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் இரண்டு அடி முதல் ஆறு அடிவரை வெள்ள நீர் சூழ்ந்ததால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அப்பகுதிகளை பார்வையிட்டு மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டார்.
அதேபோல் மகாலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், அஷ்டலட்சுமி நகர், குமரன் நகர், முல்லை நகர், கிருஷ்ணன் நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு செங்கல்பட்டு ஏரி மற்றும் கூடுவாஞ்சேரி ஏரிகள் நிரம்பியதால் அங்கிருந்து வரும் உபரி நீரோடு மழை நீரும் சேர்ந்து காட்டாற்று வெள்ளம் போல் சாலைகளில் ஓடுகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளின் தரை தளங்கள் முழுமையாக மூழ்கின. மற்ற இடங்களில் 5 முதல் 7 அடி வரை மழை வெள்ளம் தேங்கியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரண்டாவது மற்றும் மூன்றாம் மாடிகளில் உள்ள அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சாலைகள் இருக்கும் இடமே தெரியாமல் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இங்கு செயல்பட்டு வந்த ஈ - சேவை மையம், ரேசன் கடைகள், பூங்காக்களும் என அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினர். மீன்வளத்துறையின் 5 படகுகள் மூலம் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள், குழந்தைகள் என உள்ளிட்ட சுமார் 300 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
முதல் தளம் மற்றும் அதற்கும் மேல் தளங்களில் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து காற்றுடன் மழையும் பெய்ததன் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து தங்களை விரைந்து மீட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இரும்புலியூரில் உள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
Comments