காவல் துறை கருணை.. டார்ச் லைட் ஏரியாவில் மருத்துவரான மகாநதி…! போற்றிப்பாடுவோம் பெண்ணே..!

0 7005
காவல் துறை கருணை.. டார்ச் லைட் ஏரியாவில் மருத்துவரான மகாநதி…! போற்றிப்பாடுவோம் பெண்ணே..!

மதுரையில் திருநங்கையாக மாறிய மருத்துவரை டார்ச் லைட் கும்பலில் இருந்து மீட்ட பெண் காவல் ஆய்வாளர் ஒருவர், அவருக்கு கிளினிக் வைத்துக் கொடுத்து  நல்வாழ்வுக்கு வழிகாட்டியுள்ளார். மூன்றாம் பாலினம் என்பதால் மருத்துவர் பணியை பறித்துக் கொண்டு இருளில் தள்ளியோர் மத்தியில் காவல் ஆய்வாளரின் கருணையால் மறுவாழ்வு பெற்ற மகாநதி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

மதுரை திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தனது வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ரயில் நிலைய சாலையோரம் இருள் சூழ்ந்த பகுதியில் மறைந்து நின்று சில திருநங்கைகள் டார்ச் லைட் அடித்துக் கொண்டிருந்தனர்.

போலீஸ் வாகனத்தை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட ஒரே ஒருவர் மட்டும் திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார்.

அவரை மீட்ட காவல் ஆய்வாளர் கவிதா, அந்த திருநங்கையை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது, அவர் சரளமாக காவல் ஆய்வாளருடன் ஆங்கிலத்தில் உரையாடினார். விசாரணையில் அவர் எம்.பி.பிஎஸ் மருத்துவர் என்பது தெரியவந்தது. மேலும் மகேஸ்வரன் என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் முடித்த அவர், அருண் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவருக்குள் ஏற்பட்ட பெண்மை உணர்வால் உந்தப்பட்டு, திமுக எம்.எல்.ஏ சரவணனின் மருத்துவமனையில் ஆபரேசன் செய்து கொண்டு தன்னை திருநங்கையாக மாற்றிக் கொண்டுள்ளார் மருத்துவர் மகேஸ்வரன்..! தான் திருநங்கையாக மாறியதை, தான் பணிபுரியும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியதும் உடனடியாக அவரை பணியில் இருந்து நீக்கி உள்ளனர்.

இதனால் அவருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது தொடங்கி, மற்ற இடங்களில் மருத்துவர் பணியை மேற்கொள்வது வரை அனைத்தும் சவாலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால், சில தவறான நண்பர்களின் தொடர்பால் கையில் டார்ச் லைட்டுடன் இருள்சூழ்ந்த பகுதிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலீஸ் வாகனத்தை கண்டதும், விவரம் அறிந்த மற்றவர்கள் எல்லாம் ஓடிவிட, மருத்துவரான திருநங்கை மட்டும் ஓடாமல் போலீசிடம் தனியாக சிக்கிக் கொண்டது தெரியவந்தது. ஒரு வேளை அவர் பொய் சொல்கிறாரோ ? என்ற சந்தேகத்தில் அவரது சான்றிதழ்களை கேட்க, திருநங்கை தனது மருத்துவ படிப்பிற்கான சான்றிதழை எடுத்து வந்து கொடுத்ததும் அதிர்ந்து போன காவல் ஆய்வாளர் கவிதா. தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது அறிவுறுத்தலின் படி திருநங்கைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

தொண்டு நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் திருநங்கைக்கு சொந்தமாக கிளினிக் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கியதோடு, கிளினிக் நடத்துவதற்கும் ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளார் காவல் ஆய்வாளர் கவிதா. உயர் அதிகாரிகளும் அந்த திருநங்கையை சந்தித்து இனி தவறான வழிகளில் ஈடுபடக்கூடாது என்றும் காவல் துறை தக்க பாதுகாப்புடன் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கும் என்று புத்திமதியுடன் வாழ்த்தும் சொல்லி வழி அனுப்பி வைத்தனர்.

சமூகத்தில் மூன்றாம் பாலினம் என்பதால் எம்.பி.பி.எஸ் படித்தவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண திருநங்கைகள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு சந்திக்கும் சவால்களை சொல்லிமாளாது என்று சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அதே நேரத்தில் ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிகாட்டிய பொறுப்பான காவல் ஆய்வாளர் கவிதாவின் கருணையால், சவால்கள் மிகுந்த வாழ்க்கை என்னும் நதிப்படுகையில் மீண்டும் சரியான பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கின்றது இந்த மகாநதி.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments